வானவில் : ‘கோ ஜீரோ’ பேட்டரி சைக்கிள் அறிமுகம்
பிரிட்டனைச் சேர்ந்த கோ ஜீரோ மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் பேட்டரி சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் தனது வர்த்தகத்தை தொடங்கிஉள்ளது. ஒன் மற்றும் மைல் என்ற இரண்டு மாடல் பேட்டரி சைக்கிள்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பர்மிங்ஹாமைச் சேர்ந்த இந்நிறுவனம் கொல்கத்தாவைச் சேர்ந்த கீர்த்தி சோலார் நிறுவனத்துடன் இணைந்து பேட்டரி சைக்கிளை தயாரிக்கிறது. இந்த சைக்கிள்களை ஆப்பிரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அனுப்ப இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஒன் மாடல் சைக்கிள் 400 வாட் லித்தியம் பேட்டரியைக் கொண்டது. இதை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 60 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். அடுத்த மாடலான மைல் சைக்கிள் 300 வாட் பேட்டரி கொண்டது. இதில் முழுவதுமாக சார்ஜ் செய்தால் 45 கி.மீ. தூரம் பயணிக்கலாம். இவ்விரு சைக்கிளுமே 250 வாட் மோட்டாரைக் கொண்டவை. பன்முக ஓட்டும் வசதியை இவ்விரு சைக்கிளும் கொண்டுள்ளன. ஆக்சிலரேட்டர் கொடுப்பது, பெடல் பண்ணுவது, நடப்பது உள்ளிட்ட நிலைகளில் இயக்க முடியும். குரூயிஸ் மோட் எனும் வசதி ஒன் மாடலில் கூடுதலாக உள்ளது. பேட்டரிகளை பூட்டி பாதுகாப்பாக வைக்க முடியும். இவற்றை கழற்றி மாட்டுவது எளிது. இதை வீடுகளில் உபயோகப்படுத்தும் 230 வோல்ட் மின்சாரத்திலும் சார்ஜ் செய்ய முடியும்.
கூடுதல் சிறப்பம்சமாக மைல் மாடலில் எல்.இ.டி. டிஸ்பிளேவும் உள்ளது. இதில் சைக்கிள் இயக்கத்தின் அனைத்து செயல்பாடுகளும் பதிவாகும். ஒன் மாடலில் டிஸ்க் பிரேக் வசதியும் உள்ளது. மைல் மாடலில் முன்சக்கரத்துக்கு மட்டும் டிஸ்க் பிரேக் வசதி தரப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாகவும், டீலர்கள் மூலமாகவும் இவை விற்பனை செய்யப்படுகிறது. மைல் மாடல் சைக்கிள் விலை ரூ.29,999 மற்றொரு மாடலான ஒன் சைக்கிள் விலை ரூ.32,999 ஆகும். இந்த சைக்கிளுடன் மொபைல் ஹோல்டர், மட் கார்டு, சென்டர் ஸ்டாண்டு, பின்புற கேரியர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் ரூ.299 முதல் ரூ.1,299 விலையில் கிடைக்கின்றன. இரு சைக்கிளுக்கும் திருட்டு மற்றும் விபத்து காப்பீடு வசதி ஓராண்டுக்கு ரூ.749 விலையில் வழங்கப்படும்.
Related Tags :
Next Story