வாக்குச்சாவடி மையங்களுக்குள் சின்னங்கள் அணிந்து வருபவர்களை அனுமதிக்கக்கூடாது துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
சின்னங்கள் அணிந்து வருபவர்களை வாக்குச்சாவடி மையங்களுக்குள் அனுமதிக்ககூடாது என்று போலீசாருக்கான ஆலோசனை கூட்டத்தில் துணைபோலீஸ்சூப்பிரண்டு பேசினார்.
காட்பாடி,
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கும் போலீசார் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் காட்பாடியில் நடந்தது. கூட்டத்தில் வேலூர் குற்ற ஆவண காப்பக துணை போலீஸ் சூப்பிரண்டு பொற்செழியன் கலந்துகொண்டு அறிவுரை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் வாக்குப்பதிவு மையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திலேயே வாகனங்களை தடுத்து நிறுத்திவிட வேண்டும். அதற்குமேல் அனுமதிக்கக்கூடாது.
கட்சி சார்ந்த சின்னங்களுடன் வருபவர்களை வாக்குப்பதிவு மையங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது. வாக்காளர்களை, அரசியல் கட்சியினர் அவர்களுடைய வாகனங்களில் வாக்குச்சாவடிக்கு அழைத்துவராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களை அழைத்து வரும் வாகனங்களை மட்டும் அனுமதிக்கலாம்.
வாக்குச்சாவடி மையங்களுக்குள் எக்காரணத்தைக் கொண்டும் போலீசார் செல்லக்கூடாது. ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும். வாக்குப்பதிவு மையங்களுக்கு வெளியில் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story