அனல் காற்றால் மக்கள் பாதிப்பு, தேனியில் 102 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது
தேனியில் 102 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. அனல் காற்று வீசியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
தேனி,
தேனி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெயில் அளவு 100 டிகிரியை தொட்டால் அது ஆச்சரியமாய் பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு கோடை கால சுற்றுலாவுக்கு உகந்த மாவட்டமாக தேனி திகழ்ந்தது. கோடை காலத்தில் பல்வேறு இடங்களில் இருந்து தேனியை நோக்கி மக்கள் படையெடுத்து வருவார்கள்.
ஆனால், சில ஆண்டுகளாக கோடை காலத்தில் 100 டிகிரி வெயில் அளவு என்பது சர்வசாதாரணமாக மாறிவிட்டது. இந்த ஆண்டும் சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று வெயில் அளவு 102 டிகிரியை தொட்டது.
மேலும், பகல் நேரத்தில் அனல் காற்றும் வீசியது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சாலையோர வியாபாரிகள் பரிதவித்தனர். நண்பகல் நேரத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மக்கள் சாலையில் நடந்து செல்வதை பெரிய தண்டனை போல் உணரும் நிலைமை உருவானது. அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.
தேனியில் உள்ள சாலைகளில் கானல் நீர் தென்பட்டது. தேனி-கம்பம் சாலையில், வீரபாண்டி பகுதியில் கானல்நீர் தோன்றியதை பார்க்க முடிந்தது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க இளநீர் கடைகள், பழச்சாறு விற்பனை கடைகள், தர்ப்பூசணி பழங்கள் விற்பனை கடைகளில் மக்கள் கூட்டம் மொய்த்தது.
திண்டிவனம் பகுதியில் இருந்து லாரி, லாரியாக தர்ப்பூசணி பழங்கள் விற்பனைக்காக தேனி பங்களாமேடு மற்றும் பல்வேறு இடங்களுக்கு கொண்டு வரப்படுகின்றன. இதேபோல் கம்பங்கூழ் விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகளிலும் விற்பனை களை கட்டியது. வெயிலின் தாக்கம் காரணமாக பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே மக்கள் அச்சப்படுகின்றனர்.
சரும நோய்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்னி நட்சத்திர வெயில் காலம் தொடங்கி விட்டால் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமோ என்று எண்ணி மக்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே, கோடை மழை பெய்தால் மட்டுமே கோடை காலத்தை நிம்மதியாய் கடக்க முடியும் என்ற நிலைமை உருவாகி உள்ளது.
Related Tags :
Next Story