வேப்பனப்பள்ளி அருகே சாலை வசதி செய்து தராததால் தேர்தல் புறக்கணிப்பு கிராம மக்கள் அறிவிப்பு
வேப்பனப்பள்ளி அருகே சாலை வசதி செய்து தராததால் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ளது ஏக்கல்நத்தம் மலை கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி சக்னாவூர் என்ற கிராமத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் மலைமீது அமைந்துள்ளது. இங்கு சாலை வசதி இதுவரை செய்து தரப்படவில்லை.
இதன் காரணமாக இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இங்குள்ள மக்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் கம்பில் தொட்டில் போல கட்டி தான் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்கின்றனர். பல கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல வேண்டிய நிலை உள்ளதால் பலரும் செல்லும் வழியிலேயே இறந்து விடுகின்றனர்.
இந்த கிராமத்திற்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், புகார் மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் வாக்குப்பதிவு எந்திரங்களை கூட தலையில் சுமந்து கொண்டு தான் அலுவலர்கள் இங்கு வருகின்றனர்.
எனவே, இங்கு சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story