காய்கறி மண்டிகளில், உருளைக்கிழங்கு கொள்முதல் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை


காய்கறி மண்டிகளில், உருளைக்கிழங்கு கொள்முதல் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 4 April 2019 4:30 AM IST (Updated: 3 April 2019 11:30 PM IST)
t-max-icont-min-icon

காய்கறி மண்டிகளில் உருளைக்கிழங்கு கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து இருப்பதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், மேரக்காய், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் சிலர் ஏற்றுமதி தரம் வாய்ந்த சல்லாரை, புரூக்கோலி, ஐஸ்பெர்க், சுகுனி உள்ளிட்ட இங்கிலிஷ் காய்கறிகளை பயிரிட்டு, கணிசமான லாபம் ஈட்டுகின்றனர். கோத்தகிரியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பயிரிட்டுள்ள பயிர்களை காப்பாற்ற ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீரை பாய்ச்சி வருகின்றனர்.

இந்த நிலையில் கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளில் கடந்த 2 வாரங்களாக உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதன் காரணமாக கோத்தகிரி பகுதியில் உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ள பேரார், நெடுகுளா, கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி உள்ளிட்ட கிராம விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து பேரார் பகுதி விவசாயி அமானுல்லா கூறியதாவது:-

எனது தோட்டத்தில் கேரட் சாகுபடி செய்து வந்தேன். கடந்த ஆண்டு கிலோவுக்கு 160 ருபாய் வரை கொள்முதல் விலை கிடைத்தது. அதன்பிறகு கொள்முதல் விலை படிப்படியாக குறைந்து, தற்போது கிலோவுக்கு 30 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கிறது. கேரட்டுக்கு போதுமான கொள்முதல் விலை கிடைக்காததால், நஷ்டம் ஏற்பட்டது. இதனால் தோட்டத்தில் மாற்று பயிராக உருளைக்கிழங்கு பயிரிட்டேன். தற்போது காய்கறி மண்டிகளுக்கு மற்ற பகுதிகளில் இருந்தும் உருளைக்கிழங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

ஆனால் வரத்து அதிகரித்து உள்ளதால் உருளைக்கிழங்கு கொள்முதல் விலையும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் கவலை அடைந்து உள்ளோம். தற்போது கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளில் உள்ள காய்கறி மண்டிகளில் உருளைக்கிழங்கு கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 23 ரூபாய் வரை மட்டுமே தரத்துக்கு தக்கவாறு கொள்முதல் செய்யப்படுகிறது. எனினும் நீலகிரி உருளைக்கிழங்கு சுவை மிகுந்ததாக இருப்பதால் சந்தையில் வரவேற்பு அதிகம் உள்ளது. எனவே இனிவரும் மாதங்களில் நீலகிரியில் பயிரிடப்படும் உருளைக்கிழங்குக்கு கணிசமான கொள்முதல் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதனால் தற்போது இங்குள்ள தோட்டங்களில் உயர்தர விதைகளான கிரி ராஜா, குப்ரி ஜோதி, ஜலந்தர், பண்ணை கிழங்கு போன்ற விதைகளை பயன்படுத்தி உருளைக்கிழங்கு விவசாயம் மேற்கொண்டு வருகிறோம். பயிர் செய்து 3 மாதங்களில் உருளைக்கிழங்கு அறுவடைக்கு தயாராகி விடும். விளைநிலங்களை உழுது பண்படுத்த போதுமான தொழிலாளர்கள் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் டிராக்டர் மூலம் நிலத்தை உழுது வருகிறோம். டிராக்டருக்கு 1 மணி நேர வாடகை 500 ரூபாய். அதற்கு 2 உதவியாளர்களை பணியமர்த்தி, அவர்களுக்கு தலா 500 ரூபாய் கூலி வழங்கி வருகிறோம். ஒரு நாளைக்கு அரை ஏக்கர் நிலத்தை டிராக்டர் மூலம் உழுது பண்படுத்த முடிகிறது. உருளைக்கிழங்கு பயிரிட்ட விவசாயிகளுக்கு இந்த முறை கணிசமான லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story