சேலத்தில் வாகன சோதனையில் 340 சேலைகள் பறிமுதல்
சேலத்தில் வாகன சோதனையில் 340 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம்,
சேலம் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை கண்காணிப்பதற்காக 33 பறக்கும் படைகள், 33 நிலை கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதாவது ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் எடுத்து செல்லும் பணம் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாத போது அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் இரவு வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட இரும்பாலை சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த பழனிவேல் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி சேலைகள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர் வைத்திருந்த 340 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சேலைகள் வீரபாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சேலைகள் அட்டை பெட்டிகளில் வைத்து அதிகாரிகள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது. உரிய ஆவணங்களை காண்பித்தால் சேலைகள் வழங்கப்படும் என தெரிவித்தனர்.
இதுவரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5 கோடியே 57 லட்சத்து 85 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story