கொன்று புதைத்தார்களா?, வெளிநாட்டுக்கு கடத்தினார்களா? கடத்தப்பட்ட 8 குழந்தைகளின் கதி என்ன? கைதான கும்பலை போலீஸ் காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவு
தானே மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த மேலும் ஒருவர் கைதானார். இந்த கும்பலால் கடத்தப்பட்ட 8 குழந்தைகளின் கதி என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த கடத்தல் கும்பலை வருகிற 12-ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.
தானே,
மும்பை தகிசரை சேர்ந்த அகமது ஜமால் என்ற 2 வயது சிறுவன் கடந்த சில தினங்களுக்கு முன் கடத்தப்பட்டான். போலீசார் அவனை தானே மாவட்டம் மும்ராவில் வைத்து மீட்டனர்.
மேலும் சிறுவனை கடத்தியதாக அவனது பக்கத்து வீட்டை சேர்ந்த ஆப்ரின் கான் (வயது20) என்ற இளம்பெண், அவரது தாய் முனிபா ஷா (40), மும்ராவை சேர்ந்த ஆசிம்இப்ராகிம் (49), அவரது மனைவி அமிரா (46) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. ஏற்கனவே 8 குழந்தைகளை கடத்தியதாகவும், சில குழந்தைகளை பணத்திற்காக விற்று விட்டதாகவும், சில குழந்தைகளை கொன்று மும்ரா பகுதியில் புதைத்து விட்டதாகவும் அதிர்ச்சி தகவலை ஆப்ரின் கான் கூறினார்.
இதையடுத்து அவர்கள் புதைத்ததாக கூறிய இடத்திற்கு ஆப்ரின்கானை அழைத்து சென்று போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி பார்த்தனர். இருப்பினும் குழந்தைகளின் உடல்கள் எதுவும் சிக்கவில்லை. இந்தநிலையில், குழந்தை கடத்தல் கும்பலுடன் மும்ராவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது அசாருதீன் (35) என்பவருக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.
குழந்தைகளை கடத்துவதற்கு அந்த கும்பலை சேர்ந்தவர்கள் இவரது ஆட்டோவை தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். 8 குழந்தைகளையும் அவர்கள் தானே, மும்ரா, கல்வா, சீல் டைகர் பகுதிகளில் இருந்து தான் கடத்தி இருக்கிறார்கள்.
இந்த இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் குழந்தைகள் காணாமல் போனதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில், கைதான ஆப்ரின் கான் சில குழந்தைகளை வெளிநாட்டிற்கு விற்று விட்டதாகவும் கூறியிருக்கிறார். கைதான 5 பேரும் தங்களது வாக்குமூலத்தை மாற்றி, மாற்றி கூறி வருகின்றனர்.
குழந்தைகளை கொன்று புதைத்ததாக கூறிய இடத்தில் தோண்டி பார்த்தும் உடல்கள் ஏதும் சிக்காததால் குழந்தைகளை கொன்று புதைத்ததாக கூறியது பொய்யா? என போலீசாருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது. அவர்கள் கடத்திய குழந்தைகளை என்ன செய்தார்கள்? என்பதை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
நேற்று 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். கோர்ட்டு வருகிற 12-ந் தேதி வரை அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
Related Tags :
Next Story