மவுலிவாக்கத்தில் குடிநீர் நிறுவனங்களை மூடக்கோரி சாலைமறியல்


மவுலிவாக்கத்தில் குடிநீர் நிறுவனங்களை மூடக்கோரி சாலைமறியல்
x
தினத்தந்தி 4 April 2019 4:30 AM IST (Updated: 4 April 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

மவுலிவாக்கத்தில் குடிநீர் நிறுவனங்களை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பூந்தமல்லி,

போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. இங்கு அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுவதால் சுற்று வட்டாரத்தில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களை மூடக்கோரி அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் குன்றத்தூர்– போரூர் சாலையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

மவுலிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கா நகர், கோவிந்தராஜ் நகர், ராஜராஜன் நகர், பஜனை கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு முன்பெல்லாம் 20 அடி முதல் 30 அடி வரை ஆழ்குழாய்கிணறு அமைத்தால் நிலத்தடி நீர் கிடைக்கும். ஆனால் தற்போது 4–க்கும் மேற்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் இங்கு வந்து விட்டன.

கோடை காலம் என்பதால் குடிநீர் விற்பனை அதிகரித்து உள்ளதால் கூடுதலாக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் நிறுவனங்கள் தண்ணீரை எடுத்து விடுகின்றன. இதனால் குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது.

எனவே 100 அடி முதல் 200 அடி வரை ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீரின் தன்மையே மாறி விட்டது. எனவே குடிநீர் நிறுவனங்களை மூட வேண்டும் இல்லையென்றால் மீண்டும் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story