வெற்றி உறுதி செய்யப்பட்டதால் தி.மு.க. கூட்டணிக்கு பலவித நெருக்கடி கொடுக்கிறார்கள் முத்தரசன் குற்றச்சாட்டு


வெற்றி உறுதி செய்யப்பட்டதால் தி.மு.க. கூட்டணிக்கு பலவித நெருக்கடி கொடுக்கிறார்கள் முத்தரசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 April 2019 4:30 AM IST (Updated: 4 April 2019 1:32 AM IST)
t-max-icont-min-icon

வெற்றி உறுதி செய்யப்பட்டதால் தி.மு.க. கூட்டணிக்கு பலவித நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டினார்.

திருப்பூர்,

பெருமாநல்லூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:–

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை பொறுத்தமட்டில் யாருடைய நிர்பந்தத்துக்கும் உருவாக்கப்பட்ட அணி அல்ல. இருக்கின்ற தோழமை கட்சிகளில் எந்த ஒரு கட்சியும் விலைகொடுத்து வாங்கப்பட்ட கட்சி அல்ல. ரூ.400, ரூ.500 கோடி என்று விலை கொடுத்து வாங்கப்பட்ட கட்சி இல்லை. எந்த ஒரு நெருக்கடியும் கொடுத்து எங்களுடன் தான் சேர வேண்டும் என்று வற்புறுத்தி அமைக்கப்பட்ட அணியும் அல்ல.

கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக, பிரச்சினைக்காக, நலனுக்காக மத்திய அரசு இழைத்த துரோகங்களுக்கு எதிராக அதற்கு ஆதரவாக இருக்கிற மாநில அரசுக்கு எதிராக தொடர்ந்து இணைந்து போராடி வருகிறது. வெறும் சீட்டுக்காக இந்த கூட்டணி அல்ல. கொள்கை அடிப்படையில் இந்த தேசம் காப்பாற்றப்பட வேண்டும், நாட்டின் அரசியலமைப்பு சட்டம் காப்பாற்றப்பட வேண்டும், மதசார்பின்மை கொள்கை காப்பாற்றப்பட வேண்டும், அரசியலமைப்பு சட்டம் உருவாக்கி தந்திருக்கிற அமைப்புகள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த தேர்தலில் பங்கேற்கிறோம்.

நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம் என மத்திய அரசு தமிழகத்துக்கு இழைக்கின்ற அனைத்து துரோகத்துக்கும் எடப்பாடி அரசு துணை போகிறது. தமிழ்நாட்டின் உரிமை குறித்து கவலைப்படாத அரசாக தமிழக அரசு உள்ளது. எப்படியாவது இந்த ஆட்சியை மோடியின் தயவில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றை நோக்கத்தோடு எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது. முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் பிரசாரத்துக்கு செல்லும்போது பல இடங்களில் மக்கள் அவர்களை நிராகரிக்கிறார்கள். சென்னையில் மோடி பங்கேற்ற கூட்டத்தில் 20 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டதில் 9 ஆயிரம் நாற்காலிகள் காலியாக இருந்தன. கூட்டம் கூடவில்லை. அந்த அணியின் பக்கம் எழுச்சி இல்லை.

2004–ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த தேர்தலை சந்திக்கிறோம். 2004–ம் ஆண்டு வீசிய ஆதரவு அலை தற்போது நம்மை நோக்கி வீசிக்கொண்டு இருக்கிறது. இதனால் தான் முதல்–அமைச்சர் எடப்பாடி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனிநபர் தாக்குதலை தொடுத்து வருகிறார்கள். அரசியல் பேசுவதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை. மு.க.ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக தாக்கி பேசும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

அப்படி பேசுவதன் மூலம் மக்களின் பிரச்சினைகளை அவர்கள் திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். உங்களின் முயற்சி வெற்றி பெறாது. மோடி அரசு, எடப்பாடி அரசு தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கும் காரணத்தால், நமது அணி வெற்றி பெறும் என்று உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தால் பல்வேறு விதமான நெருக்கடிகளை கொடுக்க தொடங்கியிருக்கிறார்கள். எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் எதிர்கொள்வோம். திருவாரூர் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, மோடி ஆட்சி சட்டப்படி ஜூன் மாதம் 3–ந் தேதி வரை இருக்க உரிமை உண்டு. அதே ஜூன் மாதம் 3–ந் தேதி தமிழின தலைவர் கருணாநிதி பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்படும். அப்படி கொண்டாடும் நாளில் மோடியின் ஆட்சிக்கும், எடப்பாடியின் ஆட்சிக்கும் முடிவு செய்யப்படும் என்றார்.

இந்த தொகுதியில் நமது அணியில் போட்டியிடும் வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story