அ.தி.மு.க.வுக்கு கிடைத்த முதல் வெற்றி, ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த கூட்டணியைத்தான் அமைத்திருப்பார் - கிணத்துக்கடவில் ஆர்.சரத்குமார் பேச்சு


அ.தி.மு.க.வுக்கு கிடைத்த முதல் வெற்றி, ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த கூட்டணியைத்தான் அமைத்திருப்பார் - கிணத்துக்கடவில் ஆர்.சரத்குமார் பேச்சு
x
தினத்தந்தி 4 April 2019 4:45 AM IST (Updated: 4 April 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த கூட்டணியைத்தான் அமைத்திருப்பார். இதுவே அ.தி.மு.க.வுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று கிணத்துக்கடவில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் பேசினார்.

கிணத்துக்கடவு,

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் கிணத்துக்கடவில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருங்கால சமுதாயத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பொருளாதார அடிப்படையில் சிறந்த திட்டங்களை தீட்டும் வலுவான ஆட்சி, பெரும்பான்மையான ஆட்சி மத்தியில் அமைய வேண்டும். அ.தி.மு.க.- பா.ஜனதா மெகா கூட்டணியை பொறுத்தவரை பல கருத்துகள், கோட்பாடுகள் கொண்டவர்கள் இருந்தாலும் ஒற்றுமையாக இணைந்து செயல்படுகிறார்கள். இதற்கு காரணம் மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்கிற எண்ணம்தான். அந்த அடிப்படையில்தான் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இது அ.தி.மு.க.வுக்கு கிடைத்த முதல் வெற்றி. இதை பார்த்து மு.க.ஸ்டாலினுக்கு அச்சம் வந்து விட்டது.

மக்கள் வாக்களித்து ஏன் சட்டமன்றத்துக்கு அனுப்புகிறார்கள்?. எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் சுமுகமாக பேசி தொகுதி வாக்காளர்களுக்கு சேவை செய்ய வேண்டும் அல்லவா? ஆனால் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்துக்கு சென்ற உடனே வெளியே வந்து விடுவார். எதற்காக வந்துவிடுவார்? என்று தெரியவில்லை. சில நேரங்களில் சட்டையை கிழித்துக்கொண்டு வந்து விடுவார். மக்கள் சேவையில் இருப்பவர்கள் சிறப்பாக சேவை செய்ய வேண்டும்.

இந்த ஆட்சியில் விலைவாசி உயரவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் சிறந்த ஆட்சி நடக்கிறது. காங்கிரசுடன் சேர்ந்தும், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தும் 15 ஆண்டுகள் பதவி சுகத்தை தி.மு.க.வினர் அனுபவித்தனர். பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்த போது மதவாத கட்சி என்று தெரியாதா? பதவியில் இருக்கும்போது மதவாத கட்சி இல்லையா? இப்போது தான் மதவாத கட்சி என்று தெரிகிறதா?

உலகிலேயே மிகப்பெரிய ஊழல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். இதை காங்கிரஸ் வேடிக்கை பார்த்தது. காவிரி பிரச்சினையில் இன்று வரை இழுபறி இருக்கிறது. அவர்கள் ஆட்சியில் இருக்கும் போதுதான் கர்நாடகாவில் கபினி அணை கட்டப்பட்டது. ஏன் அதனை தடுக்கவில்லை. காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண அதனை அரசாணையில் ஏற்றியவர் ஜெயலலிதா. 1974-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டு கச்சத்தீவை தாரை வார்த்துக்கொடுத்தது யார்? இந்திரா காந்தி அம்மையார். இதனையும் தி.மு.க. எதிர்க்கவே இல்லை. இதனால் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க போக முடியவில்லை. இன்றுவரை வேதனையை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது தி.மு.க ஆட்சி. அப்போது வைகோ, காங்கிரசும், தி.மு.க.வும்தான் ஈழத்தில் நடந்த படுகொலைக்கு காரணம் என்று சொன்னார். இன்றைக்கு அவர் பதவி கிடைக்குமா? என்று அந்த கூட்டணியில் சேர்ந்து விட்டார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இந்த தேர்தலில் ஜெயலலிதா இல்லை என்கிற வருத்தம் இருந்தாலும், அவர் இருந்திருந்தால் இந்த கூட்டணியைத்தான் அமைத்து இருப்பார் என்கிற அளவுக்கு சிறந்த கூட்டணியாக உள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரன் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை கேந்திர வித்யாலயா பள்ளிக்காக கொடுத்து இருக்கிறார். உங்களுக்காக உழைக்க கூடியவர். மறந்து விடவேண்டாம்.

அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் வெற்றிபெற செய்யுங்கள். காங்கிரஸ் கட்சியினர் கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியை எதிர்ப்பார்கள். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டணி அமைப்பார்கள். இது சந்தர்ப்பவாத கூட்டணி இல்லையா? ராகுல் காந்திக்கு அமேதியில் தோற்றுவிடுவோம் என்கிற பயம் வந்து விட்டது. இதனால் கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கிணத்துக்கடவில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சார்பில் சரத்குமாருக்கு பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எட்டிமடை சண்முகம் எம்.எல்.ஏ. ஆகியோர் சால்வை அணிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் வடசித்தூர், நெகமம் பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி மகேந்திரனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஏராளமான தொண்டர்களும், பெண்களும் திரண்டு நின்று அவரது பேச்சை கேட்டனர். நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு பேரூராட்சி செயலாளர் மூர்த்தி, துணை செயலாளர் டி.எல்.சிங், நெகமம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சோமசுந்தரம் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கோவை மாவட்ட செயலாளர் மணிகண்டன், கோவை அசரியா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து பொள்ளாச்சியை அடுத்த ஜமீன்ஊத்துக்குளியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஆளும்கட்சியினர் மீது அபாண்டமான பழி சுமத்தி உள்ளனர். துணை சபாநாயகர் ஜெயராமனின் மகன்கள் வெளிநாட்டில் படித்து விட்டு வந்து, நல்ல ஒழுக்கத்துடன் இருப்பவர்கள். அவர்கள் மீது குற்றம் சொல்லக்கூடாது. இந்த சம்பவத்தில் தி.மு.க.வினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இதை பெண்கள் யாரும் நம்பிவிடக்கூடாது. கொங்கு மண்டலத்தில் ஒரு இடம் கூட தி.மு.க.வுக்கு கிடைக்காது. மோடியை பற்றி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது. அரசியல் சார்ந்த குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். எனக்கு அரசியல் பேச உரிமை உள்ளது.

இவ்வாறு அவர்கூறினார்.

நிகழ்ச்சியில் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் இளஞ்செழியன் உள்பட நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story