“ஜவகர்லால் நேருவின் மறுபிறவி ராகுல்காந்தி” காதர் முகைதீன் பேச்சு
“ஜவகர்லால் நேருவின் மறுபிறவி ராகுல்காந்தி” என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் தெரிவித்தார்.
ஆறுமுகநேரி,
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மீராஷா மரைக்காயர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முகம்மது ஹசன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பார்த்து, பா.ஜனதாவினர் பதறியவாறு புலம்புகின்றனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. இந்திய நாட்டின் பிரதமராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தென்னாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளார். ராகுல்காந்தியை ஜவகர்லால் நேருவின் மறு பிறப்பாகவே மக்கள் பார்க்கின்றனர். ஜவகர்லால் நேருவைப் போன்றே ராகுல்காந்தியும் நாட்டின் சிறந்த பிரதமராக திகழ்வார். அவர் நாட்டு மக்களுக்காக திறம்பட பணியாற்றி பல சாதனைகள் புரிவார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, நாட்டிலேயே சிறந்த பெண் நாடாளுமன்றவாதியாக தேர்வு செய்யப்பட்டவர். அவர் பெண்கள், சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர். எனவே இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழியை வெற்றி பெறச் செய்வோம்.
இவ்வாறு காதர் முகைதீன் பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ, மாநில இணை செயலாளர் இப்ராஹிம் மக்கி, மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ஷாஜகான், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன், ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் காயல் அமானுல்லா, தி.மு.க. நகர செயலாளர் முத்து முகம்மது, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஆசாத், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தமிழினியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முஸ்லிம் லீக் நகர செயலாளர் அபுசாலிஹ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story