திருமங்கலம் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருமங்கலம் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. எனவே குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமங்கலம்,
மதுரையை அடுத்த நாகமலைபுதுக்கோட்டையில் இருந்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் கீழஉரப்பனூர், பொன்னமங்கலம், சாத்தங்குடி, ஆலம்பட்டி வழியாக திருமங்கலம் அருகே உள்ள திரளி, கிழவனேரி கிராமங்களுக்கு செல்கிறது. ஆலம்பட்டியில் இருந்து ராயபாளையம் வழியாக செங்கப்படைவழி உள்பட 4 பிரிவுகளாக குழாய் பிரிந்து செல்கிறது.
இதில் திரளி பகுதியில் ஆலம்பட்டியில் இருந்து கிளவனேரி வரை செல்லும் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் தினசரி பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. குழாய் உடைப்பால் பல்வேறு கிராமங்களில் குடிநீர் முறையாக கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:–
திருமங்கலம் வட்டாரத்தை பொறுத்தமட்டில் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. தினசரி பொதுமக்கள் குடிநீருக்காக அலைந்து திரிந்து வருகின்றனர். எனவே சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே திரளி பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் தரமானதாக போடவில்லை. இதனால் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் அதிகாரிகளும் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். எனவே திரளி பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ள குழாயை விரைந்து சீரமைக்க வேண்டும். இதுதவிர வேறு இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டிருந்தாலும் அதனையும் சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.