விளாத்திகுளம் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பனுக்கு ஆதரவாக நடிகை பபிதா வாக்கு சேகரிப்பு
விளாத்திகுளம் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பனுக்கு ஆதரவாக நடிகை பபிதா வாக்கு சேகரித்தார்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பனுக்கு ஆதரவாக, நடிகை பபிதா நேற்று விளாத்திகுளம் அருகே குறளயம்பட்டியில் திறந்த ஜீப்பில் சென்று தனது பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் அவர், லெக்கம்பட்டி, இலந்தைகுளம், விரிசம்பட்டி, வி.வேடப்பட்டி, மாமுநயினார்புரம், பல்லாகுளம், நெடுங்குளம், பச்சனேரி, வீரகாஞ்சிபுரம், அரியநாயகபுரம், ரெட்டியபட்டி, கிழவிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் சென்று, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
அவருக்கு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
பிரசாரத்தின்போது நடிகை பபிதா பேசியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். கருவில் இருக்கும் குழந்தைகளில் இருந்து வயதான முதியவர்கள் வரையிலும் அனைவருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மாணவ-மாணவிகள், பெண்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வேளாண்மை, கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நல்லாட்சி தொடர்ந்திட, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். மேலும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தாமரை சின்னத்திலும் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு நடிகை பபிதா பேசினார். அவருடன் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன், பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் தங்கசாமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பால்ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story