குற்றாலம் சிற்றருவிக்கு செல்லும் பாதை மூடப்பட்டது வனத்துறை நடவடிக்கை


குற்றாலம் சிற்றருவிக்கு செல்லும் பாதை மூடப்பட்டது வனத்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 4 April 2019 3:00 AM IST (Updated: 4 April 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் சிற்றருவிக்கு செல்லும் பாதையை வனத்துறை மூடியது.

தென்காசி,

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி மற்றும் குளிக்க அனுமதி இல்லாத செண்பகாதேவி அருவி, தேனருவி ஆகிய அருவிகள் உள்ளன. இந்த அருவிகளில் பழைய குற்றாலம் அருவியை பொதுப்பணித்துறையும், செண்பகாதேவி அருவி, தேனருவி ஆகியவற்றை வனத்துறையும், மற்ற அருவிகளை நகரப்பஞ்சாயத்து நிர்வாகமும் பராமரித்து வருகின்றன.

இந்த நிலையில் சிற்றருவி வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது. நகரப்பஞ்சாயத்து நிர்வாகம் வருமானத்தை அதிகரிக்க, வருடத்திற்கு 1 ரூபாய் குத்தகைக்கு இந்த அருவியை வனத்துறையிடம் இருந்து பெற்றது. அதன்பின்னர் இந்த அருவியை நகரப்பஞ்சாயத்து நிர்வாகம் நிர்வகித்து வந்தது. அன்றிலிருந்து கட்டணம் வசூல் செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர் நகரப்பஞ்சாயத்து நிர்வாகம் இந்த அருவியை தனியாருக்கு குத்தகைக்கு விட்டது. அந்த நேரத்தில் குற்றால வனச்சரகம் 2012-ம் ஆண்டில் வன உயிரின சரணாலயமாக மாறியது.

வன உயிரின சரணாலயப்பகுதியான சிற்றருவி சரியான பராமரிப்பு இல்லாமலும், வருட குத்தகை 1 ரூபாயை கூட கட்டாத நிலையிலும் காட்டை அழிக்கும் நிலையில் நகரப்பஞ்சாயத்து செயல்பட்டதாக வனத்துறை குற்றம்சாட்டி மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டது.

இதற்கிடையே நகரப்பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் வனத்துறைக்கு இடையே கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வனத் துறைக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்தது.

இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் திருமால் உத்தரவுப்படி வனச்சரகர் ஆரோக்கியசாமி, குற்றாலம் பிரிவு வனவர் பாண்டியராஜ் தலைமையில் குற்றால வனச்சரக பணியாளர் ஒத்துழைப்புடன் குற்றாலம் சிற்றருவிக்கு செல்லும் பாதை மூடி ‘சீல்‘ வைக்கப்பட்டது. இதுகுறித்து வன அலுவலர்கள் கூறுகையில், “மேலும் பல வசதிகளோடு, முழு வனத்துறை கட்டுப்பாட்டுடன் வனக்குழு உதவியுடன் மீண்டும் அருவியை திறக்க நடவடிக்கை எடுப்போம்“ என்றனர்.

Next Story