முதல்–அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டது கிடையாது தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி பேச்சு


முதல்–அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டது கிடையாது தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி பேச்சு
x
தினத்தந்தி 4 April 2019 4:45 AM IST (Updated: 4 April 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

முதல்–அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டது கிடையாது, அரசியல் பதவிகள் மக்கள் அன்பாக கொடுத்தது என்று தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி பேசினார்.

திருபுவனை,

புதுவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியை ஆதரித்து திருபுவனை தொகுதி செல்லிப்பட்டில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்–அமைச்சருமான ரங்கசாமி திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:–

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கிய 3 மாதத்தில் மக்கள் ஆதரவினால் புதுவையில் ஆட்சி அமைத்தோம். அப்போது, படித்த துடிப்பான அரசியல் ஆர்வம் உடைய இளைஞர்களுக்கு வாரிய தலைவர்கள் பதவிகள் வழங்கினோம். அவர்கள் நிர்வாகத்தை திறமையாக நடத்த ஆலோசனை வழங்கப்பட்டது.

இன்றைய அரசியலுக்கு முதிர்ந்த அரசியல் தலைவர்களின் கொள்கைகளை வழிநடத்திச்செல்ல இளைஞர்களால் மட்டுமே முடியும் என்று உணர்ந்து, மருத்துவம் படித்த இளம் வயது வேட்பாளர் நாராயணசாமியை நிறுத்தியுள்ளோம். அவரை வெற்றி பெறச்செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்ப உங்களிடம் ஓட்டு கேட்டு வந்துள்ளோம்.

புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி மத்திய மந்திரியாக 5 ஆண்டுகள் இருந்தபோது மாநில அந்தஸ்தை பெற்றுத்தராமல், தற்போது மக்களை ஏமாற்றி வருகிறார். முதல்–அமைச்சர் பதவிக்கு ஆசைபட்டவன் நான் கிடையாது. ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன். அரசியல் பதவிகள், மக்கள் எனக்கு அன்பாக கொடுப்பது. ஆனால் முதல்–அமைச்சர் நாராயணசாமி, அந்த பதவிக்கு எப்படி வந்தார் என்பது உங்களுக்கு தெரியும்.

புதுச்சேரி மக்கள் இந்த காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைத்து, நமது வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். 2021–ம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் புதுச்சேரியில் மீண்டும் ஆட்சியை பிடித்து மக்களின் அனைத்து திட்டங்களையும் திறமையாக செயல்படுத்தும்.

இவ்வாறு ரங்கசாமி பேசினார்.


Next Story