புதுச்சேரியில் கோமாளித்தனமான ஆட்சி நடக்கிறது ரங்கசாமி ஆவேசம்
புதுச்சேரியில் கோமாளித்தனமான ஆட்சி நடக்கிறது என்று ரங்கசாமி ஆவேசமாக கூறினார்.
புதுச்சேரி,
புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ்.(வேட்பாளர் டாக்டர் நாராயணசாமிக்கு ஆதரவாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்–அமைச்சருமான ரங்கசாமி அரியாங்குப்பம் தொகுதியில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது ரங்கசாமி பேசியதாவது:–
கடந்த 2011–ம் ஆண்டுபோல் இப்போதும் வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். அந்த தேர்தலில் புதுவையில் ஆட்சியை பிடித்தோம். இப்போது நமது எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நாம் படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பினை உருவாக்கி தரவேண்டும்.
எதிர்தரப்பினர் நமது வேட்பாளரை அனுபவம் இல்லாதவர் என்று பேசுகின்றனர். அவர் வெற்றிபெற்று சென்றவுடன் அனுபவம் வந்துவிடும். அவர் புதுவை மாநிலத்துக்கு தேவையான திட்டங்களை கொண்டுவருவார். அவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியை புதுவை மாநில வளர்ச்சிக்கு பயன்படுத்துவார்.
மத்திய மந்திரி பதவி, எம்.பி. பதவி என பலவற்றை வகித்த முதல்–அமைச்சர் நாராயணசாமி புதுவைக்கு என்ன திட்டத்தை கொண்டுவந்தார்? அவர் எம்.பி. நிதியைக்கூட சரியாக பயன்படுத்தவில்லை. நாம் டெல்லிக்கு அனுப்பியவர்கள் எல்லாம் நிதியை சரியாக பயன்படுத்தி உள்ளனர். ராஜ்ய சபா எம்.பி. கூட நிதியை அனைவருக்கும் பிரித்து கொடுத்துள்ளார். புதுவைக்கு தேவையான பணியிடங்களை எல்லாம் மத்திய அரசிடம் கேட்டு பெற்று உள்ளார்.
எம்.பி. ஆக பெரிய அனுபவம் எதுவும் தேவையில்லை. சிறந்த எம்.பி.யாக பணியாற்ற இளைஞர்களால்தான் முடியும். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறும் நாம் அவர்களை ஆதரிக்கவும் வேண்டும். அந்த ஆதரவுதான் அவர்களை உற்சாகப்படுத்தும்.
நாம் ஆட்சியில் இருந்தபோது செயல்படுத்திய திட்டங்களைக்கூட இப்போதைய அரசு செயல்படுத்தவில்லை. புதிய திட்டங்கள் எதையும் கொண்டுவரவில்லை என்று நாம் கூறினால் ஸ்மார்ட் சிட்டி திட்டம் வந்துள்ளது என்று முதல்–அமைச்சர் கூறுகிறார். நாம் ஆட்சியில் இருந்தபோதே சேதராப்பட்டு பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் கேட்டோம். இதற்காக கோப்புகள் சென்று வந்துகொண்டிருந்தன. ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
எல்லா வசதியும் உள்ள நகரத்தினை இப்போது ஸ்மார்ட் சிட்டி என்கிறார்கள். புதுவை நகரப்பகுதியில் நம்மிடம் என்ன வசதி இல்லை. நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மக்கள் நெருக்கடி இருந்ததால் நாம் சேதராபட்டில் ஸ்மார்ட் சிட்டி கேட்டோம். அந்த ஸ்மார்ட் சிட்டி திட்டமும் பாரதீய ஜனதா ஆட்சியில்தானே வந்தது.
நாம் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டுவந்தோம். ஆனால் இவர்களால் அதைக்கூட முடிக்க முடியவில்லை. இந்த ஆட்சியாளர்கள் மற்றவர்களை குறைகூறுவதிலேயே குறியாக உள்ளனர். மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களுடன் இணக்கமாக இருப்பதுதான் புதுவைக்கு நல்லது. ராகுல்காந்தி பிரதமரானதும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்துவிடும் என்று முதல்–அமைச்சர் சொல்கிறார்.
நாம் ஆட்சியில் இருந்தபோது இதை எத்தனை முறை கேட்டோம். அப்போது எல்லாம் சிறப்பு மாநில அந்தஸ்து என்று கிடைக்காத ஒன்றை கூறியவர்களுக்கு இப்போது அக்கறை வந்துள்ளது. மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி வந்தால் மாநில அந்தஸ்தை நாம் கேட்டுப்பெற முடியும். ஆட்சிமாற்றம் பற்றி பேசுபவர்களை ஜெயிலில் பிடித்து போடவேண்டும் என்று முதல்–அமைச்சர் கூறுகிறார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அதை செய்தித்தாட்களில் பார்த்தேன். அவரை ஜெயிலில் பிடித்து போட்டுவிடுவார்களா?
புதுவையில் ஒரு கோமளித்தனமான ஆட்சி நடக்கிறது. கவர்னரை எதிர்த்து போராட்டம் என்ற பெயரில் ஆட்சியாளர்கள் ரோட்டில் படுத்து கிடக்கிறார்கள். இது ஒரு அரசியல் நாடகம். இதை முறியடிக்கும் விதத்தில் நமது வேட்பாளரை வெற்றிபெற செய்யவேண்டும்.
இவ்வாறு ரங்கசாமி பேசினார்.