நாட்டுக்கு மோடியின் தலைமை தேவை ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவதில் தவறு இல்லை - பா.ஜனதா மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா பேட்டி
ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவதில் தவறு இல்லை என்றும், நாட்டுக்கு மோடியின் தலைமை தேவை என்றும் பா.ஜனதா மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். பா.ஜனதாவின் மூத்த தலைவரான முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்ேபாது அவர் கூறியதாவது:-
பெங்களூரு,
காங்கிரசின் குடும்ப அரசியலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் சில காலம், காங்கிரசில் ஒதுங்கியே இருந்தேன். பிரதமர் மோடியின் சிறந்த தலைமை பண்பால் ஈர்க்கப்பட்டு, பா.ஜனதாவில் சேர்ந்தேன்.
மோடி குடும்ப அரசியலை செய்யவில்லை. மோடி போன்ற நல்ல அரசியல்வாதிகள் தான் நாட்டுக்கு தேவை. அவர் 5 ஆண்டுகள் ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை நடத்தி இருக்கிறார். நாட்டின் எல்லைகளை காப்பதில் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
தற்போது நாடு சரியான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. இதே நிலையில் நாட்டை கொண்டு செல்ல வேண்டும். அதனால் மக்கள் மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும். மோடியின் தலைமை நாட்டுக்கு தேவை.
பா.ஜனதா என்றால் மோடி. மோடி என்றால் பா.ஜனதா. முன்பு காங்கிரசில் இந்திரா காந்தி பலம் வாய்ந்த தலைவராக இருந்தார். அந்த கால கட்டம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தலைவர்கள் உருவாகிறார்கள்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது சமதர்ம கொள்கையின் குரல். அதனால் அந்த நடவடிக்கையை நான் காங்கிரசில் இருந்தபோேத வரவேற்றேன். அதன் பிறகு துல்லிய தாக்குதல் நடைபெற்றது. இதையும் நான் வரவேற்றேன்.
மோடியின் இத்தகைய நடவடிக்கையால் நான் கவரப்பட்டேன். தற்போது ஜனதா தளம்(எஸ்) கட்சியின் பேரன்கள் போட்டியிடுகிறார்கள். இத்தகைய குடும்ப அரசியலை நான் வெறுக்கிறேன். நான் மண்டியாவில் நாளை (அதாவது இன்று) சுயேச்சை வேட்பாளர் சுமலதாவை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன். அப்போது குடும்ப அரசியல் குறித்து பேசுவேன்.
நான் பின்வாசல் வழியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததாக சிலர் (குமாரசாமி) கூறி இருக்கிறார்கள். நான் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டேன். ஊர், ஊராக சென்று பிரசாரம் செய்தேன். 130 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
அந்த 130 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் நான் சட்டசபைக்கு வந்து முதல்-மந்திரி பதவியை அடைந்தேன். நான் பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வரவில்லை. இரவோடு இரவாக ஜனதாதளம்(எஸ்)கட்சி பா.ஜனதாவுடன் சேர்ந்து பின்வாசல் வழியாக குமாரசாமி தான் முதல்-மந்திரி பதவிக்கு வந்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் மத திணிப்பு எங்கும் நடைபெறவில்லை. மத அடிப்படையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆட்சி நிர்வாகத்தில் இருந்து மதத்தை தொலைவில் வைக்க வேண்டும் என்பது எனது கருத்து.
2 தொகுதிகளில் போட்டியிட ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார். இதில் தவறு எதுவும் இல்லை. சோனியா காந்தி கூட கர்நாடகத்திற்கு வந்து போட்டியிட்டார். இது அவரவர்களின் உரிமை ஆகும். ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவதில் தவறு இல்லை.
கடந்த 2004-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்தன. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும், நான் முதல்-மந்திரியாக வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
ஆனால் ஜனதா தளம்(எஸ்) கட்சி, எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தது. என்னை கர்நாடக அரசியலில் இருந்து விரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், மராட்டிய மாநில கவர்னராக நியமிக்கப்பட்டேன்.
அப்போது நான் மீண்டும் முதல்-மந்திரி ஆகி இருந்தால், பெங்களூரு நகரம் மேலும் வளர்ந்திருக்கும். இந்த பெங்களூரு வளர்ச்சியை சிலர் விரும்பவில்லை. வருமான வரி சோதனை பொதுவாக நடக்கிறது.
வருமானவரி துறையினருக்கு கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் சோதனை நடக்கிறது. வருமான வரித்துறை ஒருதலைபட்சமாக நடக்கிறது என்று சொல்வதில் அர்த்தமில்லை. நான் பா.ஜனதாவில் சேர்ந்த உடனேயே, எனது மருமகனின் நிறுவனங்களில் சோதனை நடந்தது. இது தான் பா.ஜனதாவில் எனக்கு கிடைத்த பரிசு.
கர்நாடகத்தில் கூட்டணி அரசு உள்ளது. இந்த அரசு இதுவரை எந்த பணிகளையும் செய்யவில்லை. ஆட்சியை பாதுகாத்து கொள்வதிலேயே அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். வளர்ச்சி பணிகளை செய்ய அவர்களுக்கு நேரம் இல்லை.
எப்போதும், தேர்தலுக்கு பிறகு அமைக்கப்படும் கூட்டணியால், சிறந்த ஆட்சி நிர்வாகத்தை வழங்க முடியாது. தேர்தலுக்கு முன்பே திட்டமிட்டு, குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி அமைக்கப்படும் கூட்டணி தான் சிறப்பான முறையில் செயல்பட முடியும்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு பிறகு தேர்தல் அறிக்கை, மூலைக்கு சென்று சேரும். அதை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.
Related Tags :
Next Story