முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை, அ.தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை, அ.தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை
x
தினத்தந்தி 4 April 2019 4:15 AM IST (Updated: 4 April 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (சனிக்கிழமை) பிரசாரத்துக்கு வருகை தருவதையொட்டி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆலோசனை நடத்தினார்.

நிலக்கோட்டை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை மறுநாள் (சனிக்கிழமை) திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வருகிறார். இதையொட்டி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நிலக்கோட்டையில் நடந்தது. கூட்டத்திற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன், மாவட்ட செயலாளர் மருதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் யாகப்பன் வரவேற்றார்.

கூட்டத்தில், நாளை மறுநாள் வருகை தரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், நாளைவருகை தரும் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்திற்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கவேண்டும். அதே சமயத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு மாம்பழ சின்னத்திலும், அ.தி.மு.க. வேட்பாளர் தேன்மொழி சேகருக்கு இரட்டை இலை சின்னத்திலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கட்சி நிர்வாகிகளும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் இரவு, பகல் பாராமல் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் எம்.பி. உதயகுமார், வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் பாண்டியன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மோகன், ஒன்றிய துணைசெயலாளர் நல்லதம்பி, வீட்டு வசதி கடன் சங்க தலைவர் நாகராஜன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Next Story