வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் கலெக்டர் தகவல்


வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 April 2019 11:00 PM GMT (Updated: 4 April 2019 1:27 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்குகளை இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் மற்றும் வேலூர் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என பலர் போட்டியிடுகிறார்கள்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது செலவின முகவர்கள் தேர்தல் செலவு கணக்குகளை இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 10, 15 ஆகிய தேதிகளில் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக 5–வது மாடியில் உள்ள கூட்டரங்கில், தேர்தல் செலவின பார்வையாளர்களின் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

வேட்பாளர்கள் அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட செலவின முகவர்கள் தேர்தல் செலவு கணக்குகளை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட உரிய பதிவேடுகள், படிவங்கள், வங்கிக்கணக்கு அறிக்கைகள், செலவினங்களுக்கான உரிய ரசீதுகள் மற்றும் அனுமதி கடிதங்கள், ஆவணங்களுடன் கணக்குகளை ஆய்வுக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தேசிய மற்றும் மாநில அளவிலான பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மற்ற வேட்பாளர்கள் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் கணக்குகளை தாக்கல் செய்வதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராமன் தெரிவித்துள்ளார்.


Next Story