உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்


உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 5 April 2019 4:15 AM IST (Updated: 4 April 2019 9:13 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை, போளூர், செய்யாறில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் விதி மீறல்களை தடுக்க பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் திண்டிவனம் பைபாஸ் ரோடு சந்திப்பில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் உரிய ஆவணமின்றி 50 ஆயிரத்து 700 ரூபாய் இருந்தது.

இதனையடுத்து காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தியதில், வேலூர் அலமேலுரங்காபுரம் அண்ணாமலையார் நகரை சேர்ந்த ரமேஷ் (வயது 29) என்பதும், சிமெண்டு டீலர் என்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து, திருவண்ணாமலை கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.

போளூர் அருகே உள்ள வெள்ளூர் சந்தவாசல் கூட்ரோட்டில் சிப்காட் தனி தாசில்தார் சுரேஷ் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாலாஜாவில் இருந்து போளூர் நோக்கி வந்த ஜீப்பை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர். ஜீப்பில், உரிய ஆவணமின்றி 54 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது.

பின்னர் காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தியதில், வாலாஜாவை சேர்ந்த பைனான்சியர் ரமேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் செய்யாறு டவுன் எல்லப்பன் நகரில் தேர்தல் பறக்கும்படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செய்யாறு பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் என்பதும், தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

மேலும் அவர் உரிய ஆவணமின்றி 92 ஆயிரத்து 700 ரூபாய் எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.அன்னம்மாளிடம் ஒப்படைத்தனர்.

Next Story