அரூர் அருகே அரசு பஸ்சில் ரூ.3½ கோடி சிக்கிய விவகாரம்: டிரைவர்-கண்டக்டர் உள்பட 4 பேரிடம் தீவிர விசாரணை வீட்டில் அதிரடி சோதனை
அரூர் அருகே அரசு பஸ்சில் சிக்கிய ரூ.3½ கோடி குறித்து டிரைவர்- கண்டக்டர் உள்பட 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. கண்டக்டர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
தர்மபுரி,
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருவண்ணாமலையில் இருந்து நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் அரூருக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. நரிப்பள்ளியை அடுத்த பையர்நாயக்கன்பட்டி பகுதியில் வந்தபோது பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர் அந்த பஸ்சை நிறுத்தி திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த பஸ்சில் 7 பைகள் கேட்பாரற்று கிடந்தன.
அவற்றை அதிகாரிகள் பரிசோதித்தபோது ரூ.3 கோடியே 47 லட்சத்து 51 ஆயிரத்து 110 சிக்கியது. ரூ.200, ரூ.500 மற்றும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கொண்ட கட்டுகளாக அவை இருந்தன. இதுதொடர்பாக அந்த பஸ்சில் வந்தவர்களிடம் விசாரித்தபோது அந்த பணத்திற்கு உரிமை கொண்டாட யாரும் முன்வரவில்லை.
இதையடுத்து அந்த பணம் அரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பணத்தை அலுவலர்கள் எண்ணிப்பார்த்தனர். பின்னர் அரசு கருவூலத்திற்கு அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பஸ்சை ஓட்டிவந்த டிரைவர் பன்னீர் (வயது 45), கண்டக்டர் ராமு (37) ஆகியோரிடம் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அவர்கள் தெரிவித்த தகவலின்படி அந்த பஸ்சில் பயணம் செய்த செல்வராஜ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். திருவண்ணாமலை பகுதியில் அரசு பஸ் கண்டக்டராக பணிபுரியும் செல்வராஜ் தனக்கும், அந்த பணத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிவிட்டார்.
இதையடுத்து அவரை கீழ்பென்னாத்தூர் பகுதியில் உள்ள அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்ற போலீசார் அங்கு ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா? என அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த நிலையில் பணம் சிக்கிய 7 பைகளில் ஒன்றில் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் வங்கி கணக்கு புத்தகம் இருந்தது. அதில் இருந்த செல்போன் எண்ணை அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது ரமேஷ் அரசு பஸ் டிரைவர் என தெரியவந்தது.
இதையடுத்து வேட்டவலத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு திருவண்ணாமலையை சேர்ந்த தேர்தல் பிரிவு அதிகாரிகள் நேரில் சென்றனர். அங்கு ரமேஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் பணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து ரமேஷ், செல்வராஜ் ஆகிய 2 பேரையும் திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து சென்று துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலை அருகே உள்ள சோமாசிபாடியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் சிவக்குமார் உள்ளிட்ட சிலரிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்திற்குட்பட்ட அரூர்(தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணம் அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களால் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. இந்த பணம் யாருடையது? இதை அனுப்பியவர்கள் யார்? எதற்காக அனுப்பப்பட்டது? என்ற விவரங்கள், முழுமையான விசாரணைக்கு பின்னரே உறுதி செய்யப்படும்.
இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story