நல்லம்பள்ளி அருகே குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்


நல்லம்பள்ளி அருகே குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 4 April 2019 10:15 PM GMT (Updated: 2019-04-04T23:24:23+05:30)

நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.

நல்லம்பள்ளி, 

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த தடங்கம் ஊராட்சிக்கு உட்பட்டது பெருமாள்கோவில்மேடு, மேட்டுக்கொட்டாய், வேப்பமரத்துக்கொட்டாய் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்கள். இந்த கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு ஊராட்சி நிர்வாகம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மூலம், ஒரே இடத்தில் குழாய்கள் அமைத்து பஞ்சாயத்து குடிநீர் மற்றும் ஒகேனக்கல் குடிநீர் வழங்கி வந்தது.

கடந்த சில வாரங்களாக மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மூலம் சீராக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் குடிநீர் வழங்ககோரி சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. குடிநீர் பிரச்சினையால் மக்கள் அவதிப்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு, தர்மபுரி அரசு கலைக்கல்லூரி முன்புள்ள தர்மபுரி-சேலம் பைபாஸ் சாலையில் நேற்று காலை காலிக்குடங்களுடன் சீராக குடிநீர் வழங்க கோரிசாலைமறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. தகவல் அறிந்ததும் உதவி திட்ட இயக்குனர் ரவிசங்கர்நாத், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், தாசில்தார் இளஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story