‘அன்புமணி ராமதாசின் வெற்றி உறுதியாகி விட்டது’ தேர்தல் பிரசார கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு


‘அன்புமணி ராமதாசின் வெற்றி உறுதியாகி விட்டது’ தேர்தல் பிரசார கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 4 April 2019 10:00 PM GMT (Updated: 2019-04-04T23:59:23+05:30)

அன்புமணி ராமதாசின் வெற்றி உறுதியாகி விட்டது என்று தர்மபுரி மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேங்காய்மரத்துபட்டி, அதியமான்கோட்டை, தாதநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் பிரசார கூட்டங்கள் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டங்களுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, அ.தி.மு.க. விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் தம்பி ஜெய்சங்கர், பா.ம.க. மாநில துணைபொதுச்செயலாளர் வெங்கடேஷ்வரன், மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.

இந்த பிரசார கூட்டங்களில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தியது பா.ம.க.தான். அதன்பயனாக தி.மு.க. ஆட்சியில் அந்த திட்டம் தொடங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இங்கு தொழிற்சாலைகள் வந்தால் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் மாம்பழம் அதிகமாக விளைகிறது. இது மாம்பழ சீசன். வாக்காளர்கள் அனைவரும் வெற்றியின் சின்னமான மாம்பழத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் தி.மு.க.வால் இனி எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. தி.மு.க. என்ற கட்சி இனி தமிழகத்திற்கு தேவையில்லை. யாராவது உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க நினைத்தால் அவர்களை இங்கு கூடியிருக்கும் பெண்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் தமிழக அரசும், டாக்டர் அன்புமணி ராமதாசும் நிறைவேற்றியுள்ள வளர்ச்சி திட்டங்களை எடுத்துக்கூறி வெற்றியின் சின்னமான மாம்பழத்திற்கு வாக்களிக்க செய்ய வேண்டும். அன்புமணி ராமதாசின் வெற்றி உறுதியாகி விட்டது. அவர் மீண்டும் எம்.பி.யாகி இந்த தொகுதிக்கு மேலும் பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவார்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

இந்த கூட்டங்களில் பா.ம.க. மாவட்ட செயலாளர் சண்முகம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் என்.ஜி.எஸ்.சிவப்பிரகாசம், பி.பெரியண்ணன், தே.மு.தி.க. மாவட்ட தலைவர் குமார், பா.ம.க. மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சுப்பிரமணியம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story