காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் 10 பிரதமர் வேட்பாளர்கள் உள்ளனர் சேந்தமங்கலத்தில் அமைச்சர் தங்கமணி பேச்சு


காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் 10 பிரதமர் வேட்பாளர்கள் உள்ளனர் சேந்தமங்கலத்தில் அமைச்சர் தங்கமணி பேச்சு
x
தினத்தந்தி 5 April 2019 3:30 AM IST (Updated: 5 April 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் 10 பிரதமர் வேட்பாளர்கள் இருப்பதாக சேந்தமங்கலத்தில் அமைச்சர் தங்கமணி தேர்தல் பிரசாரத்தின் போது கூறினார்.

சேந்தமங்கலம், 

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் காளியப்பன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக நேற்று தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி எருமப்பட்டி ஒன்றியத்தில் உள்ள பொட்டிரெட்டிப்பட்டி மற்றும் முத்துகாப்பட்டியிலும், சேந்தமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கொண்டமநாயக்கன்பட்டி, அக்கியம்பட்டி மற்றும் சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதிகளிலும் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார்.

சேந்தமங்கலம் வண்டிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

அ.தி.மு.க. எப்போதும் ஏழைகளை சார்ந்தே செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து பகுதியிலும் சிறப்பான சாலை வசதி செய்துள்ளோம். அந்த வகையில் சேந்தமங்கலத்தில் இருந்து ராசிபுரம் வரையில் நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டு உள்ளோம்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை எடுத்துக்கூறி பொதுமக்கள் இடையே ஓட்டு கேட்டு வருகிறோம்.

காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் 10 பேர் தாங்கள் தான் பிரதமர் என தெரிவிக்கின்றனர். மம்தா பானர்ஜி, தேவகவுடா ஆகியோரும் கூட நாங்கள் தான் பிரதமர் என்கின்றனர். ஆனால் இந்தியாவுக்கு வலிமையான பிரதமர் மோடி மட்டுமே ஆவார். எனவே அவரது ஆட்சி மீண்டும் மலர வேட்பாளர் காளியப்பனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி பர்மீந்தர்சிங் என்பவரும் வேட்பாளர் காளியப்பனுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார்.

தேர்தல் பிரசாரத்தின்போது வேட்பாளருடன் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜி.பி.வருதராஜன், பேரூர் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story