பனமரத்துப்பட்டி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பேன் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் வாக்குறுதி


பனமரத்துப்பட்டி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பேன் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் வாக்குறுதி
x
தினத்தந்தி 5 April 2019 3:30 AM IST (Updated: 5 April 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

பனமரத்துப்பட்டி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி அளித்தார்.

சேலம், 

சேலம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் நேற்று பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நெய்காரப்பட்டி, அமானி கொண்டலாம்பட்டி, சந்தியூர், ஆட்டையாம்பட்டி, அம்மாபாளையம், பாரப்பட்டி, நாழிக்கல்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிராமம், கிராமமாக சென்று தி.மு.க.வுக்கு ஓட்டு சேகரித்தார்.

அப்போது, சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, வேட்பாளரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தின்போது தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் பேசும்போது, நெசவு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஜி.எஸ்.டி. வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி நீரேற்றும் பாசன திட்டம் மூலம் பனமரத்துப்பட்டி ஏரியில் தண்ணீரை நிரப்பி ஆண்டுதோறும் விவசாயம் செழிக்க பாடுபடுவேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியபடி விவசாயிகளின் நகை அடமானக்கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

வீரபாண்டி, பனமரத்துப்பட்டி பகுதிகளில் விவசாயிகளை பாதிக்கின்ற 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். ஏழை நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இலவச மின்சாரம் வழங்கப்படும். பனமரத்துப்பட்டி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

இதைத்தொடர்ந்து தாசநாயக்கன்பட்டி, நிலவாரப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, திப்பம்பட்டி, தும்பல்பட்டி, கம்மாளப்பட்டி, குரால்நத்தம், பனமரத்துப்பட்டி, மல்லூர் ஆகிய பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் வீதி, வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.

பிரசாரத்தின்போது, பனமரத்துப்பட்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், துணை செயலாளர் ராஜா, இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன், காங்கிரஸ் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி, கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மோகன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக கொண்டலாம்பட்டியில் வீரபாண்டி தொகுதி தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா திறந்து வைத்தார்.

Next Story