தாராபுரத்தில் பயங்கரம்: பெண் அடித்துக்கொலை; கணவர் வெறிச்செயல்


தாராபுரத்தில் பயங்கரம்: பெண் அடித்துக்கொலை; கணவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 5 April 2019 4:00 AM IST (Updated: 5 April 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் குடும்ப தகராறில் பெண்ணை அடித்து கொன்ற கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தாராபுரம், 

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சங்கரண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 55). இவருடைய மனைவி ஜோதி என்கிற ஜோதிமணி(47). இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களுக்கு குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. பொன்னுச்சாமி ஒரு மாற்றுத்திறனாளி. ஒரு விபத்தில் அவரது வலது கை துண்டிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பொன்னுசாமி, தனது மனைவியுடன் தாராபுரம் கோட்டைமேடு பகுதியில் உள்ள, பழைய சித்ரா திரையரங்கத்திற்கு எதிரே உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். கணவன்-மனைவி இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் குடிபோதையில் அடிக்கடி வாக்குவாதம் செய்து கொள்வது உண்டு.

இந்த நிலையில் நேற்று மாலை குடிபோதையில் இருந்த பொன்னுச்சாமி பக்கத்து வீட்டில் இருந்தவர்களிடம் தனது மனைவி திடீரென மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் பொன்னுசாமியின் வீட்டிற்குச் சென்று பார்த்தனர்.

அங்கு ஜோதிமணி் தலையில் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்து பொன்னுசாமி, மனைவியை அடித்துக்கொலை செய்து இருக்கலாம் என்று கருதினார்கள். இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்ததும் பொன்னுசாமி அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்மணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகண்ணன் மற்றும் போலீசார், கொலை செய்யப்பட்ட ஜோதிமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குடியிருப்பு பகுதியில் மனைவியை படுகொலை செய்த கணவரின் வெறிச்செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தலைமறைவான பொன்னுசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story