சோமவாரப்பட்டியில் சிதிலமடைந்த கண்டியம்மன் கோவிலை பராமரிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


சோமவாரப்பட்டியில் சிதிலமடைந்த கண்டியம்மன் கோவிலை பராமரிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 April 2019 10:15 PM GMT (Updated: 4 April 2019 7:49 PM GMT)

சோமவாரப்பட்டியில் உள்ள சிதிலமடைந்த கண்டியம்மன் கோவிலை பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

குடிமங்கலம், 

தமிழகம் முழுவதும் ஏராளமான பழமையான கோவில்கள் உள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவில்களின் பராமரிப்பு மற்றும் நித்ய பூஜைக்கு ஆகும் செலவினங்களை கருத்தில் கொண்டு பெருமளவு நிலத்தை கோவிலுக்கு எழுதி வைத்திருந்தனர். இந்த நிலத்தின் மூலம் வரும் வருமானத்தை கொண்டு கோவில்கள் சீராக பராமரிக்கப்பட்டு வந்தது.

ஆனால் நாளடைவில் கோவில் நிலங்களை குத்தகைக்கு எடுத்தவர்கள் சரிவர குத்தகை செலுத்தாமல் காலம் கடத்தினர். அதுமட்டுமல்லாமல் பல இடங்களில் கோவில் நிலங்கள் படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டன. கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த ஆவணங்கள் பல மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பராமரிக்க போதிய நிதி ஆதாரங்கள் இல்லாமல் பல கோவில்கள் சிதிலமடைந்து வருகிறது.

இது தொடர்பாக உடுமலையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

உடுமலையை அடுத்த சோமவாரப்பட்டியில் உள்ள கண்டியம்மன் கோவிலுக்கு 100 ஏக்கருக்கு மேல் நிலம் சொந்தமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல கோவிலுக்கு முன்புறம் உள்ள பரந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது என்றும், இந்த பகுதியில் தெப்பம் ஒன்று இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பகுதியில் வேறு ஒரு கோவில் இருந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் செஞ்சேரிமலை ரோட்டில் இருந்து கோவிலுக்கு செல்லும் முக்கிய வழித்தடத்தில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதே பகுதியில் மண்புழு உரம் தயாரிப்பு தொட்டிகள், மற்றும் குப்பைகள் தரம் பிரிக்க கூடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இது கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தை ஆக்கிரமிக்கும் செயல் என பக்தர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் இதே பகுதியில் வார சந்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இவ்வாறு அமைக்கப்பட்டால் கண்டியம்மன் கோவிலுக்கு செல்லும் முக்கிய வழித்தடம் முழுமையாக அடைக்கப்பட்டு விடும் என பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றபோது மண்ணில் இருந்து தூண்கள் மற்றும் பீடம் போன்றவை கிடைத்துள்ளது.

எனவே இந்த பகுதியில் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று கூறப்படுகிறது. எனவே இந்த இடத்தில் முழுமையாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.மேலும் படிப்படியாக சிதிலமடைந்து வரும் கண்டியம்மன் கோவிலை முழுமையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் கோவிலுக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story