பெரம்பலூரில் ரூ.2 கோடி சிக்கிய விவகாரம்: திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் அலுவலகத்தில் 2-வது நாளாக சோதனை


பெரம்பலூரில் ரூ.2 கோடி சிக்கிய விவகாரம்: திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் அலுவலகத்தில் 2-வது நாளாக சோதனை
x
தினத்தந்தி 4 April 2019 11:15 PM GMT (Updated: 4 April 2019 7:49 PM GMT)

பெரம்பலூரில் ரூ.2 கோடி சிக்கிய விவகாரத்தில் திருச்சியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் அலுவலகம் மற்றும் வீடுகளில் 2-வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது வருமான வரி அதிகாரிகளுடன் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு காரில் கோடிக்கணக்கில் பணம் கடத்தி செல்லப்படுவதாக திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.அலுவலகத்தில் இருந்து தகவல் சொல்லப்பட்டது. அதன்பேரில், கடந்த 2-ந் தேதி நள்ளிரவு பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் குறிப்பிட்ட காரை பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர்.

அந்த காரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகியான திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை (வயது 50), திருச்சி பிரபாகரன் (49), மாநில துணை செயலாளர் திண்டுக்கல் தங்கம் (42), சென்னை கே.கே.நகரை சேர்ந்த கார் டிரைவர் மாரஸ் கிளைவ் (40) ஆகியோர் இருந்தனர். காரில் சோதனையிட்டதில் எதுவும் இல்லை என தெரிந்தது.

ஆனாலும், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.அலுவலகத்தில் இருந்து மீண்டும் உறுதியான தகவல்தான். எனவே, காரை அங்குலம் அங்குலமாக சோதனையிடுமாறு கூறப்பட்டதால், உடனடியாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு கார் கொண்டு செல்லப்பட்டது.

ரூ.2 கோடி சிக்கியது

அங்கு காரின் இருக்கைகள், கதவுகளின் பாகங்கள் ஆகியவற்றை பிரித்து சோதனையிடப்பட்டது. அப்போது, காரின் கதவுகளின் உட்பகுதியில் 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்தது அதிகாரிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, குன்னம் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மஞ்சுளா ஆகியோர் முன்னிலையில் பணக்கட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தம் ரூ.1 கோடியே 99 லட்சத்து 71 ஆயிரத்து 500 இருந்தது.

பின்னர் பணத்தையும் காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய அந்த பணம் எடுத்து செல்லப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நிர்வாக அலுவலர் ஸ்டீபன் அந்தோணி கொடுத்த புகாரின்பேரில், காரில் வந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

திருச்சியில் சோதனை

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கார், திருச்சி மன்னார்புரத்தில் ‘எல்பின்’ என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இயக்குனர் ரமேஷ்குமாருக்கு சொந்தமானது என்றும், அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அச்சு ஊடக பிரிவின் மாநில துணை செயலாளராக இருப்பதும் தெரியவந்தது. எல்பின் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழில், முதலீட்டு திட்டங்கள், ஆன்லைன் மார்க்கெட்டிங் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறது. இந்நிறுவனத்தில் இன்னொரு இயக்குனராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வர்த்தக பிரிவு மாநில துணை செயலாளர் ராஜாவும் உள்ளார்.

எனவே, பெரம்பலூரில் சிக்கிய 2 கோடிக்கும், ரமேஷ்குமார் மற்றும் ராஜா ஆகியோருக்கு தொடர்பு இருக்கலாம் என எண்ணி நேற்று முன்தினம் காலை 10.30 மணி முதல் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ‘எல்பின்’ நிறுவனத்தில், திருச்சி வருமானவரி உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமையிலான 10 பேர் அடங்கிய குழுவினர் சோதனையை தொடங்கினர். அதே வேளையில் திருச்சி கே.கே.நகரில் உள்ள ரமேஷ்குமார், ராஜா ஆகியோர் வீடுகளிலும் வருமானவரி அதிகாரிகள் 4 பேர் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது, வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கபட வில்லை. இந்த சோதனைக்கு கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் விடிய, விடிய சோதனை நடந்தது.

மாலையில் சோதனை முடிந்தது

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாகவும் ரமேஷ்குமாரின் நிறுவனத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர். இதற்கிடையே நேற்று மாலை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கு திரண்டனர். அப்போது அவர்களுக்கும், வருமானவரி அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 2 நாட்கள் சோதனை நடத்தி என்ன ஆவணத்தை எடுத்தீர்கள்?. என காரசாரமாக வாக்குவாதம் நடந்தது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் வருமானவரி அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இந்த நிலையில் மாலை 4.25 மணிக்கு வருமானவரி அதிகாரிகள் சோதனையை முடித்து கொண்டு 2 கார்களில் புறப்பட்டு சென்று விட்டனர். அப்போது சில ஆவணங்களையும், குறிப்பிட்ட தொகையை கைப்பற்றியதுடன் பின்னர் ரமேஷ்குமாரிடம் எழுதி வாங்கி விட்டு அப்பணத்தை அவரிடமே ஒப்படைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 2 நாட்கள் நடந்த சோதனை முடிவுக்கு வந்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story