திருச்சி கோர்ட்டு வளாகத்தில் மாடியில் இருந்து குடும்பத்துடன் குதித்து தற்கொலை செய்ய முயன்ற ஊழியர்


திருச்சி கோர்ட்டு வளாகத்தில் மாடியில் இருந்து குடும்பத்துடன் குதித்து தற்கொலை செய்ய முயன்ற ஊழியர்
x
தினத்தந்தி 4 April 2019 11:00 PM GMT (Updated: 2019-04-05T01:26:35+05:30)

பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் விரக்தி அடைந்த கோர்ட்டு ஊழியர் ஒருவர், கோர்ட்டு கட்டிடத்தின் மாடியில் இருந்து குடும்பத்துடன் குதித்து தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி கே.கே.நகர் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் ராகேஷ் ராஜன்(வயது 30). இவர் திருச்சி மாவட்டம் துறையூர் சப்-கோர்ட்டில் தலைமை எழுத்தராக பணியாற்றி வந்தார். இவர் மீது கூறப்பட்ட சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் ஊழியர்களின் விடுப்பு பதிவேட்டிற்கும், வருகை பதிவேட்டிற்கும் இடையில் கையெழுத்து தொடர்பாக சில முறைகேடுகள் நடந்து இருப்பதாக கூறி, அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி குமரகுரு, ராகேஷ் ராஜனை நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

இதனால் மனம் உடைந்த ராகேஷ் ராஜன் நேற்று மாலை தனது மனைவி சரண்யா மற்றும் 4 வயது மகனுடன் திருச்சி மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கு வந்தார். அவர் நீதிபதியை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யும்படி முறையிட முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் கோர்ட்டின் மாடி பகுதிக்கு சென்றார். அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக சத்தம் போட்டுக்கொண்டே இருந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு கோர்ட்டு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிலர் மாடிக்கு சென்று அவரை கீழே இறங்கும்படி கூறினார்கள். ஆனால் அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனக்கு நீதி வழங்க வேண்டும், இல்லை என்றால் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மீண்டும் மிரட்டினார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் ஒரு வழியாக ஊழியர்கள் சமாதானம் செய்து ராகேஷ் ராஜனையும், அவருடைய மனைவியையும், மகனையும் கீழே இறங்க வைத்தனர். கீழே இறங்கிய பின்னர் ராகேஷ் ராஜன் கூறுகையில் ‘துறையூர் கோர்ட்டில் எனக்கு மேல் உள்ள 2 அதிகாரிகள் என் மீது மொட்டை கடிதம் போட்டதன் அடிப்படையில் என்னை பணியிடை நீக்கம் செய்து உள்ளனர். இதனால் நான் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறேன். நீதிபதியை சந்திக்க கூட எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் தான் நாங்கள் குடும்பத்துடன் மாடியில் இருந்து குதிக்க முயன்றோம். எனது பணியிடை நீக்க உத்தரவை திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் வீட்டில் போய் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன்’ என கூறிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் மகனுடன் புறப்பட்டு சென்றார்.


Next Story