தேவதானப்பட்டி அருகே, 7 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - தனியார் பள்ளி ஆசிரியர் கைது


தேவதானப்பட்டி அருகே, 7 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - தனியார் பள்ளி ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 4 April 2019 11:30 PM GMT (Updated: 2019-04-05T01:57:11+05:30)

தேவதானப்பட்டி அருகே 7 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி,

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆதரவற்றோர் காப்பகத்தை சேர்ந்த மாணவிகள் உள்பட பலர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சைல்டு லைன் அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சைல்டு லைன் குழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது 13 வயதில் இருந்து 15 வயதுக்குட்பட்ட மாணவிகள் 7 பேர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு நடந்து உள்ளதாக புகார் தெரிவித்தனர். அந்த மாணவிகளிடம் நடத்திய விசாரணையில், அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியரான கெங்குவார்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (வயது 55) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பள்ளி தாளாளர் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர். பின்னர் அவர் பெரியகுளம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு,பெரியகுளம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story