“கல்லூரி மாணவர்கள் சட்டங்களை தெரிந்து இருக்க வேண்டும்” மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாதன் பேச்சு
கல்லூரி மாணவர்கள் சட்டம் பற்றி தெரிந்து இருக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாதன் கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் காமராஜ் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு அண்ணாமலை, வக்கீல் ஐ.பி.பாலசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் காசிராஜன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாதன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- கல்லூரி மாணவர்கள் சட்டங்களை அவசியம் தெரிந்து இருக்க வேண்டும். சட்டம் இல்லாத இடமே இல்லை. ஏனெனில் காற்றுக்கு சட்டம், கடலுக்கு சட்டம், நிலத்துக்கு சட்டம், நீருக்கு சட்டம், வானுக்கு சட்டம் உள்ளது. ஒவ்வொன்றும் அதன் இடங்களில் செயல்படுவதற்கு வரையறை உள்ளன.
இந்திய தண்டனைச்சட்டம், போக்குவரத்துச் சட்டம், சிறார் சட்டங்கள், போக்சோ சட்டங்கள் குறித்து மாணவர்கள் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். எண்ணம், தெளிவான சிந்தனை, பொறுமை இவைகளை வாழ்க்கையில் வெற்றிக்கு உரிய ரகசியமாக எடுத்துக்கொண்டு மாணவர்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்
முகாமில் கல்லூரி மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு செயலாளர் சாமுவேல் பெஞ்சமின் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஆ.தேவராஜ், பா.பொன்னுத்தாய் ஆகியோர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story