களக்காடு அருகே கணவனை வெட்டிக்கொன்ற 2-வது மனைவி கைது வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்ததால் ஆத்திரம்


களக்காடு அருகே கணவனை வெட்டிக்கொன்ற 2-வது மனைவி கைது வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்ததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 4 April 2019 10:30 PM GMT (Updated: 2019-04-05T01:57:48+05:30)

களக்காடு அருகே கணவனை வெட்டிக்கொன்ற 2-வது மனைவி கைது செய்யப்பட்டார்.

களக்காடு,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் மேலக்காலனியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 50), கட்டிட தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். பின்னர் ஜான்சன், பேரின்பம் (45) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஜான்சனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பேரின்பம் தனது கணவர் ஜான்சனிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து அந்த பெண்ணிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று முன்தினம் இரவில் ஜான்சன், பேரின்பத்திற்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் சமாதானம் செய்து வைத்தனர். இதையடுத்து வீட்டில் உள்ள தனி அறையில் ஜான்சன் தூங்கச் சென்றார். மற்றொரு அறையில் பேரின்பம், அவருடைய 2 மகள்கள் தூங்கினார்கள்.

நேற்று அதிகாலையில் எழுந்த பேரின்பம் தனது கணவர் அறைக்கு சென்றார். அப்போது, அங்கு தூங்கிக் கொண்டு இருந்த ஜான்சன் முகத்தில் மண்வெட்டியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த அவர் அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ஜான்சனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி மாலையில் ஜான்சன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உடனடியாக களக்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பேரின்பத்தை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

களக்காடு அருகே கணவனை மனைவியே வெட்டிக் கொலை செய்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story