கோவை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் மீது பொதுமக்கள் தாக்குதல்


கோவை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் மீது பொதுமக்கள் தாக்குதல்
x
தினத்தந்தி 5 April 2019 5:15 AM IST (Updated: 5 April 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபரை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அவரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

கோவை துடியலூர் அருகே கடந்த 25-ந் தேதி 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாள். இந்த கொலை தொடர்பாக தொண்டாமுத்தூர் உளியம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸ் காவலில் இருந்த சந்தோஷ்குமாரை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல போலீசார் முடிவு செய்தனர். இதற்காக கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

கோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து நேற்று மதியம் 2 மணியளவில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சந்தோஷ்குமாரை போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது.

இதையடுத்து மதியம் 2.15 மணியளவில் சந்தோஷ்குமாரை முகத்தை துணியால் மூடியவாறு போலீசார் காரில் ஏற்றி சிறைக்கு கொண்டு செல்வதற்காக வெளியே அழைத்து வந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த பொதுமக்களில் சிலர் திடீரென சந்தோஷ்குமாரை ஆவேசமாக தாக்கினார்கள். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இருந்து சந்தோஷ்குமாரை மீட்டு காரில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பரிசோதனை குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறும்போது, ‘பொதுவாக பாலியல் வழக்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்படுவது வழக்கம் தான். அதேபோல் சந்தோஷ்குமாருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன் அறிக்கை வந்த பிறகே சிறுமியை பலாத்காரம் செய்தது குறித்த உண்மை நிலவரம் தெரியவரும்’ என்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘மருத்துவ பரிசோதனை செய்வதற்காக சந்தோஷ்குமாரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தோம். அரசு ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிகளவு இருந்ததால் பாதுகாப்பு கருதி பிரேத பரிசோதனை அறைக்கு அவரை அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்டோம். ஆனால் அங்கு சந்தோஷ்குமார் வந்தது குறித்து எப்படியோ பொதுமக்களுக்கு தெரிந்து உள்ளது. அவர்கள் ஆத்திரத்தில் சந்தோஷ்குமாரை தாக்கி உள்ளனர். அதில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை தாக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Next Story