பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்- திரைப்படங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்


பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்- திரைப்படங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 April 2019 11:00 PM GMT (Updated: 2019-04-05T02:18:49+05:30)

பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என சுயஆட்சி இந்தியா கட்சி மற்றும் பெண்கள் அமைப்புகள் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கரூர்,

கரூர் மாவட்ட சுயஆட்சி இந்தியா கட்சி மற்றும் சுவாதி பெண்கள் இயக்கம் உள்ளிட்ட பெண்கள் அமைப்புகள் சார்பில் இந்திய அரசியல் சட்ட உரிமைகளை காத்து, ஜன நாயக குடியாட்சியின் மாண்புகளை மீட்டெடுப்பதை வலியுறுத்தி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. “மாற்றத்திற்கான பெண்கள் பேரணி” என்கிற தலைப்பில் பெண்கள் பலர் ஊர்வலமாக வந்து இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு சுயஆட்சி இந்தியா கட்சி மாநில இணை செயலாளர் ஜானகி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய துணை தலைவர் கிறிஸ்டினா சாமி கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவிப்பது, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கடத்தப்படுவதும், கொலை செய்யப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதுபோன்ற குற்றங்கள் மீதான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணையில் தொய்வு ஏற்படுத்தினாலோ அல்லது நேர்மைக்கு முரணாக நடவடிக்கை மேற்கொண்டாலோ அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலுணர்வை தூண்டும் வகையிலான சிறுவர்கள் கையாளக்கூடிய விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும். பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப் படங்களை தடை செய்ய வேண்டும். பள்ளி-கல்லூரிகளில் குழந்தைகள்-மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்வதோடு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தி கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சுவாதி பெண்கள் இயக்க துணை தலைவர் பாக்கியம், பொருளாளர் மஞ்சுளா, நிர்வாக குழு உறுப்பினர் இளவரசி உள்பட பல்வேறு அமைப்பினை சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story