பழனி அருகே, வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பல் - இறைச்சி, 2 துப்பாக்கிகள் பறிமுதல்


பழனி அருகே, வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பல் - இறைச்சி, 2 துப்பாக்கிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 April 2019 4:15 AM IST (Updated: 5 April 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பலை கிராம மக்கள் விரட்டியதால் இறைச்சி மற்றும் 2 துப்பாக்கிகளை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

நெய்க்காரப்பட்டி,

பழனி அருகே காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.வாடிப்பட்டியை சேர்ந்த விவசாயி ஒருவர், தனது தோட்டத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றார். அங்கு மாடுகளுக்கு தீவனம் வைத்து கொண்டிருந்தார். அப்போது தோட்டத்து பகுதியில் 5 பேர் நின்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனது தோட்டத்தில் மர்ம நபர்கள் திருட வந்திருக்கலாம் என்று கருதினார்.

இது தொடர்பாக அவர் கிராமத்துக்குள் சென்று அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். அதன்பேரில் கிராம மக்கள் தோட்டத்துக்கு திரண்டு வந்தனர். இதனை கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை பின்தொடர்ந்து கிராம மக்கள் விரட்டினர். ஆனால் யாரும் சிக்கவில்லை. இதற்கிடையே அவர்கள் நின்ற இடத்தில் 2 துப்பாக்கிகள், வனவிலங்குகளின் இறைச்சி மற்றும் சமைத்த இறைச்சி ஆகியவை இருந்தது.

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சையது பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அங்கிருந்த 2 துப்பாக்கிகள், இறைச்சியை போலீசார் பறிமுதல் செய்தனர். அது மான் இறைச்சி என்று தெரியவந்தது.

மானை வேட்டையாடிய அந்த கும்பல், அதன் இறைச்சியை ஆர்.வாடிப்பட்டி அருகே தோட்டத்தில் வைத்து சமைத்துள்ளனர். கிராம மக் களை கண்டதும் துப்பாக்கிகள் மற்றும் இறைச்சியை போட்டு விட்டு அவர்கள் தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அவர்கள் இறைச்சி மற்றும் துப்பாக்கிகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி காட்டுப்பன்றி, மான் அல்லது முயலாக இருக்கலாம். கைப்பற்றப்பட்டது நாட்டு துப்பாக்கிகள் ஆகும். இறைச்சி மாதிரியை ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். முடிவு வந்த பின்னரே வேட்டையாடப்பட்டது எந்த வனவிலங்கின் இறைச்சி என்பது தெரியவரும் என்றார்.

Next Story