பிரதமர் பதவியின் தரத்தை மோடி குறைத்துவிட்டார் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் குற்றச்சாட்டு


பிரதமர் பதவியின் தரத்தை மோடி குறைத்துவிட்டார் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 April 2019 3:22 AM IST (Updated: 5 April 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் பதவியின் தரத்தை மோடி குறைத்துவிட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் குற்றம்சாட்டினார்.

பெங்களூரு,

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் பதவியின் தரத்தை மோடி குறைத்துவிட்டார். அந்த பதவியில் இருந்தவர்களில் வேறு யாரும் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து செயல்படவில்லை. பிரதமர் மோடி பேசும் பேச்சுகளை, எனது அரசியல் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை.

பிரதமர் மோடி, பாகிஸ்தானை பற்றி மட்டுமே பேசுகிறார். இந்தியா பற்றி பேசுவது இல்லை. அவர் இந்தியாவின் பிரதமர், நமது பிரதமர். ஆனால் அவரது பார்வை முழுவதும் பாகிஸ்தான் மீது மட்டுமே உள்ளது.

துல்லிய தாக்குதல்

பிரதமர், தனது நாட்டு மக்கள் பற்றியும் பேச வேண்டும். மக்களுக்கு என்ன செய்கிறார் என்பதை அவர் பேச வேண்டும். துல்லிய தாக்குதலை நடத்துவதாக இருந்தால், அவர் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் மீது அத்தகைய தாக்குதலை நடத்த வேண்டும். இத்தகைய துல்லிய தாக்குதல் தான் நாட்டுக்கு தேவை.

நமது நாட்டு மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வகையிலான துல்லிய தாக்குதல் தேவை. ஊழல், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விவசாயிகளின் கஷ்டங்கள் ஆகிய மூன்றும் முக்கிய பிரச்சினைகள் ஆகும். இந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பொருளாதார வளர்ச்சி

புல்லட் ரெயில் திட்டத்திற்கு முதலீடு செய்ய தயாராக இருக்கும் மோடி அரசு, ஏழை மக்களின் நலனில் கவனம் செலுத்தவில்லை. ஊழலை ஒழிப்பதில் மோடியின் அர்ப்பணிப்பு என்ன?. வடகிழக்கு மாநிலத்தில் முதல்-மந்திரியின் பாதுகாப்பு வளையத்திற்குள் சென்ற காரில் இருந்து ரூ.1.8 கோடி சிக்கியது. இது ஊழல் இல்லையா?. ஆபரேஷன் தாமரை ஊழல் இல்லையா?. ஊழல் ஒழிப்பு பற்றி மோடி பேசுகிறார்.

காவலாளி மோடி, எதற்காக மோசடிக்காரர்கள் நீரவ்மோடி, மெகுல் சோக்‌ஷி, தப்பி செல்ல அனுமதித்தார். இதுபோன்ற காவலாளி நமக்கு தேவையா?. பொருளாதார வளர்ச்சி, சமூகநீதி ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. இவற்றின் அடிப்படையில் தான் நாடு முன்னேற்றம் அடைகிறது.

இவ்வாறு கபில்சிபல் கூறினார்.

Next Story