பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை ஹாவேரியில் பரபரப்பு
பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனையால் ஹாவேரியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஹாவேரி,
கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். இதற்காக அவர், ஹெலிகாப்டரை பயன் படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று மாலையில் பாகல்கோட்டையில் இருந்து ஹாவேரி மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக ஹெலிகாப்டரில் எடியூரப்பா புறப்பட்டு சென்றார். ஹாவேரி டவுனில் உள்ள விளையாட்டு மைதானத்தில் எடியூரப்பா சென்ற ஹெலிகாப்டர் தரை இறங்கியது.
தேர்தல் அதிகாரிகள் சோதனை
அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அந்த ஹெலிகாப்டரில் திடீரென்று சோதனை நடத்தினார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், ஹெலிகாப்டரில் சோதனை நடத்துவதாக எடியூரப்பாவிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஹெலிகாப்டர் அருகேயே எடியூரப்பா நின்று கொண்டிருந்தார். சோதனை முடிந்ததும் அங்கிருந்து எடியூரப்பா புறப்பட்டு சென்றார். அந்த ஹெலிகாப்டரில் பணம் எதுவும் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
காத்திருந்த எடியூரப்பா
முன்னதாக பாகல்கோட்டையில் இருந்து ஹாவேரி மாவட்டத்திற்கு நேற்று மதியம் அதே ஹெலிகாப்டரில் எடியூரப்பா புறப்பட்டு செல்ல தயாரானார். அப்போது அங்கிருந்து ஹெலிகாப்டர் செல்வதற்கு முறையான அனுமதியை பெறவில்லை என்று தெரிகிறது. இதனால் ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, அங்கிருந்த காரில் அரை மணிநேரத்திற்கும் மேலாக எடியூரப்பா காத்திருந்தார். பின்னர் ஹெலிகாப்டர் புறப்பட்டு செல்ல அனுமதி கிடைத்ததும், பாகல்கோட்டையில் இருந்து ஹாவேரிக்கு எடியூரப்பா சென்றிருந்தார்.
தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியது குறித்து எடியூரப்பா நிருபர்களிடம் கூறுகையில், ‘தேர்தல் நேரத்தில் அரசியல் தலைவர்களின் வாகனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்துவது வழக்கமானது தான். அதுபோல, நான் சென்ற ஹெலிகாப்டரிலும் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்,’ என்றார்.
நேற்று முன்தினம் முதல்-மந்திரி குமாரசாமி காரிலும், மந்திரி டி.கே.சிவக்குமார் சென்ற ஹெலிகாப்டரிலும் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story