13 பேரின் உயிரை பறித்த காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்து: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது


13 பேரின் உயிரை பறித்த காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்து: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 April 2019 10:19 PM GMT (Updated: 4 April 2019 10:19 PM GMT)

மும்பையில் 13 பேரின் உயிரை பறித்த காம்கார் அரசு ஆஸ்பத்திரி தீ விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த வெல்டர்கள் 2 பேரை போலீசார் பீகாரில் வைத்து கைது செய்தனர்.

மும்பை,

மும்பை அந்தேரியில் உள்ள காம்கார் ஆஸ்பத்திரியில் கடந்த டிசம்பர் மாதம் 17-ந் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் குழந்தை உள்பட 13 பேர் பலியானார்கள். சுமார் 175 பேர் காயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள்.

இந்த தீ விபத்து தொடர்பாக எம்.ஐ.டி.சி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், காம்கார் ஆஸ்பத்திரியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தில் வெல்டிங் பணியின் போது தீப்பொறி பறந்ததால் இந்த கோர தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக பணி மேற்பார்வையாளர் நிலேஷ் மேத்தா, அவரது உதவியாளர் நிதின் காம்பிளே உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து இருந்தனர்.

2 வெல்டர்கள் கைது

தீ விபத்துக்கு காரணமான வெல்டிங் பணியை செய்த குல்சுல் மகாதோ (வயது22), ரஞ்சன் யாதவ் (21) ஆகிய 2 பேர் தலைமறைவாகி விட்டனர். தீ விபத்து நடந்த ஒரு வாரத்திலேயே இருவரையும் பிடிக்க போலீசார் அவர்களது சொந்த ஊரான பீகார் மாநிலம் சவானே கிராமத்துக்கு சென்றனர். ஆனால் அப்போது அவர்கள் அங்கு இல்லை. இதையடுத்து போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், இருவரும் சவானே கிராமத்துக்கு வந்து இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அதிரடியாக இருவரையும் கைது செய்து மும்பை அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டு இருவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

Next Story