பெண் பயணிகள் திடீர் ரெயில் மறியல் திவா ரெயில் நிலையத்தில் பரபரப்பு


பெண் பயணிகள் திடீர் ரெயில் மறியல் திவா ரெயில் நிலையத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 5 April 2019 3:53 AM IST (Updated: 5 April 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

திவா ரெயில் நிலையத்தில் பெண் பயணிகள் திடீர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை,

மும்பையில் காலை, மாலை நேரங்களில் மின்சார ரெயில்களில் கூட்டம் அலைமோதும். முதல் சில ரெயில் நிலையங்களிலேயே பெட்டி நிரம்பிவிடுவதால் வாசலில் நிற்கும் பயணிகள், அடுத்த நிறுத்தங்களில் மற்ற பயணிகளை ரெயிலில் ஏற அனுமதிப்பதில்லை. இதனால் பல ரெயில் நிலையங்களில் பயணிகள் இடையே தகராறு ஏற்படுவது உண்டு.

நேற்று காலை 7 மணியளவில் திவா ரெயில் நிலையத்துக்கு சி.எஸ்.எம்.டி. நோக்கி செல்லும் விரைவு ரெயில் ஒன்று வந்தது. அப்போது பெண்கள் பெட்டியில், வாசலில் நின்ற பயணிகள் வெளியில் இருந்து யாரையும் உள்ளே ஏற விடாமல் தடுத்து உள்ளனர். இதனால் பெட்டியில் ஏற முடியாமல் போன பெண் பயணிகள், ஆத்திரத்தில் அந்த ரெயிலை மறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சேவை பாதிப்பு

ரெயில்வே போலீசார் வந்து சமாதானம் செய்து மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். இதையடுத்து சுமார் 10 நிமிட தாமதத்துக்கு பிறகு அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவத்தால் நேற்று காலை மத்திய ரெயில்வே வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Next Story