கொடிசியா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் பிரதமர் மோடி 9-ந் தேதி கோவை வருகை


கொடிசியா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் பிரதமர் மோடி 9-ந் தேதி கோவை வருகை
x
தினத்தந்தி 5 April 2019 4:15 AM IST (Updated: 5 April 2019 4:59 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி வருகிற 9-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) கோவை வருகி றார். அந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். பா.ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் வானதிசீனிவாசன் கோவை அவினாசி சாலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை,

கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகிற 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவைக்கு மாலை 6.30 மணி அளவில் தனி விமானத்தில் வருகிறார். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கொடிசியா மைதானம் செல்கிறார். அங்கு நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு பேசுகிறார்கள். அந்த பிரசாரத்தை முடித்துக்கொண்டு மோடி இரவு 8.45 மணிக்கு தனி விமானம் மூலம் கோவையில் இருந்து டெல்லி திரும்புகிறார்.

ஜி.எஸ்.டி கவுன்சிலை உருவாக்கி அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியது மோடி அரசு. ஜல்லிக்கட்டை முழுதாக ஒழித்தது காங்கிரஸ் அரசு. ஆனால் அதனை தமிழக மக்களுக்கு சாதகமாக்கியது பா.ஜனதா அரசு. சர்வதேச அளவில் இந்தியாவை முன்னிலைப்படுத்தியவர் பிரதமர் மோடி தான். பிரதமர் யார் என்பதில் எதிர்க்கட்சிகளிடம் ஒருமித்த கருத்து இல்லை. கோவை போன்ற தொழில் நகரங்களில் ஜி.எஸ்.டி வரியை குறைப்பதற்கான முயற்சியை கோவை பா.ஜனதா வேட்பாளர் மேற்கொள்வார். தேர்தலுக்கு பிறகு நீட் விவகாரத்தில் பா.ஜனதாவின் நிலைப்பாட்டை கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு செய்வோம். தி.மு.க. கூட்டணியின் தோல்வி உறுதியாகி கொண்டிருப்பதால் ஒவ்வொரு நாளும் மு.க.ஸ்டாலின் புதிய புதிய வாக்குறுதிகளை சொல்லி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story