பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வருகிற ஜூன் மாதம் வழங்கப்படும் என அதிகாரி தகவல்
அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வருகிற ஜூன் மாதம் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமி தெரிவித்தார்.
கடலூர்,
கல்வித்துறை சம்பந்தப்பட்ட அனைத்து புள்ளி விவரங்களையும் ஒரே இணைய தளத்தின் கீழ் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பள்ளி தகவல் மேலாண்மை தொகுப்பு (இ.எம்.ஐ.எஸ்) மூலம் சேகரிக்கப்படும் இந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி தகவல் மேலாண்மை தொகுப்பு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதில் பள்ளிக்கூடம், ஆசிரியர்கள், மாணவர்களின் முழு விவரங்களும் இணைய தளத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இது பற்றி வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி நேற்று முன்தினம் ஒருங்கிணைந்த கல்வி திட்ட அலுவலக கூட்டரங்கில் நடந்தது. பயிற்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமி தலைமை தாங்கினார். பயிற்சியை கணினி பயிற்சி பெற்ற 4 பயிற்சியாளர்கள் அளித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தேர்வுத்துறை (மேல்நிலைக்கல்வி) இணை இயக்குனர் சேதுராமவர்மா கலந்து கொண்டு வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இதில் ஒருங்கிணைப்பாளர் ராஜவேல்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமி கூறுகையில், பள்ளி, ஆசிரியர்கள், மாணவர்களின் அனைத்து புள்ளி விவரங்களும் ஒரே இணைய தளத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கடலூர் மாவட்டத்தில் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. இந்த புள்ளி விவரத்தை வைத்து தான் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வருகிற ஜூன் மாதம் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படுகிறது. ஆகவே இணைய தளத்தில் தவறு இல்லாமல் புள்ளி விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த பணியை 2 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் எந்த பள்ளிக்கு சென்றாலும் ‘ஸ்மார்ட் கார்டு’ மூலம் அவர்களின் முழு விவரத்தையும் அறிந்து கொள்ளலாம் என்றார்.
அதன்பிறகு இணை இயக்குனர் சேதுராமவர்மா பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையமான கடலூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையமான குமராபுரம் கிருஷ்ணசாமி பள்ளி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விடைத்தாள் திருத்தும் பணியை விரைந்து முடிக்க ஆசிரியர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story