இந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு


இந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 5 April 2019 5:17 AM IST (Updated: 5 April 2019 5:17 AM IST)
t-max-icont-min-icon

இந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

திருக்கனூர்,

மண்ணாடிப்பட்டு தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் திருக்கனூரை அடுத்த கே.ஆர்.பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் முத்தழகன், சீனிவாசமூர்த்தி, கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வீரராகவன், சுரேஷ் ரெட்டியார், கூட்டணி கட்சியான தி.மு.க. துணை அமைப்பாளர் ஏகே.குமார், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத், வேட்பாளர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்-அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி பொது மக்களுக்கு இலவச அரிசி வழங்கக் கூடாது, அதற்கு பதிலாக பணமாக தர வேண்டும் என கூறுகிறார். ஆனால் பணமாக தருவதை மக்கள் ஏற்கவில்லை. பொது மக்களுக்கு வழங்குவதற்காக இலவச அரிசி வந்துவிட்டது. ஆனால் தேர்தலை காரணம் காட்டி இலவச அரிசி தருவதை நிறுத்துகிறார்கள்.

கவர்னர் கிரண்பெடியின் எதிர்ப்பை மீறி விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். 10 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் அளித்துள்ளோம். அரசு வேலைக்கு ஆள் வைப்பதை கவர்னர் தடுக்கிறார். மோடி ஆட்சியில் புதுச்சேரி மாநிலம் புறக்கணிக்கப்படுகிறது.

30 தொகுதிகளை சேர்ந்த பயனாளிகளுக்கும் முதல்-அமைச்சர் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பேன் என ரங்கசாமி கூறுவது கனவிலும் நடக்காது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி எதிர்ப்பு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என இந்திய மக்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான நமச்சிவாயம் பேசும்போது, “மக்கள் பிரச்சினை பற்றி பேச ரங்கசாமி சட்டசபைக்கு வரமாட்டார். தற்போது இந்த அரசு எதுவும் செய்யவில்லை என நீலி கண்ணீர் வடிக்கிறார். என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தில் மோடி படத்தை போடாமல் வாக்குக்கேட்பது ஏன்?

ஒரே இரவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தாரே மோடி, அதை ரங்கசாமி ஏற்றுக்கொள்கிறாரா? மஞ்சள் அட்டைக்கு இலவச அரிசி இல்லை என கவர்னர் கூறியதையும் ரங்கசாமி ஏற்றுக்கொள்கிறாரா? - மத்தியில் கூட்டணி வைத்துள்ள ரங்கசாமி மக்கள் பிரச்சினைக்காக மத்திய அரசை அணுகி இருப்பாரா? மாநில அந்தஸ்து கேட்டு மோடியை சந்தித்தது உண்டா?

என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி ஏன் தேர்தலில் போட்டியிடுகிறார் என்று எனக்கு தெரியும். அவரது மருத்துவக்கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்ற எம்.பி. பதவி தேவைப்படுகிறது. அதனால்தான் அவர் தேர்தலில் நிற்கிறாரே தவிர மக்களுக்காக அல்ல. ரங்கசாமி சுயநலத்துக்காக மீண்டும் ஒரு எம்.பி.யை உருவாக்க துடிக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story