வேலூர் பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவு


வேலூர் பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவு
x
தினத்தந்தி 5 April 2019 11:00 PM GMT (Updated: 5 April 2019 1:35 PM GMT)

வேலூர் பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொடுக்க காவல்துறை கேட்டுக்கொண்டார்.

வேலூர்,

தமிழ்நாட்டில் வருகிற 18–ந் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவை நடக்கிறது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், சோளிங்கர், குடியாத்தம் (தனி), ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.

வேலூர் சட்டமன்ற தொகுதியில் 21 வாக்குச்சாவடி மையங்களும், காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 25 வாக்குச்சாவடி மையங்களும் பதற்றமானவையாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலமேலுமங்காபுரம் அங்கன்வாடி மையம், கொணவட்டம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையம் 1, 2, 3, கொணவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையம் 5, 7, 8 மற்றும் சேண்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 7 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலின் போது இந்த வாக்குச்சாவடி மையங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளின் அடிப்படையில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் நேற்று கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராமன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது கடந்த தேர்தலின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்தும், நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் எந்தவித பிரச்சினைகளும் இன்றி வாக்களிக்க செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கலெக்டர் ராமன் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொடுக்க காவல்துறையை கேட்டுக்கொண்டார்.

ஆய்வின் போது உதவி கலெக்டர் மெகராஜ், காட்பாடி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தினகரன், வேலூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.


Next Story