100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவர்கள் மூலம் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி விழிப்புணர்வு கலெக்டர் தொடங்கி வைத்தார்
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவர்கள் மூலம் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி விழிப்புணர்வு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை,
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை சார்பில் நேற்று திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள 903 பள்ளிகளை சேர்ந்த 6–ம் வகுப்பு முதல் 9–ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 1 லட்சம் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு அஞ்சல் அட்டை மூலம் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கடிதம் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு எழுதிய அஞ்சல் அட்டைகளை கலெக்டர் கந்தசாமி பெற்றுக்கொண்டார். முன்னதாக மாணவிகள் வாக்களிப்பை வலியுறுத்தி கை வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் பள்ளி வளாகத்தில் மாணவிகளை கொண்டு அமைக்கப்பட்டு இருந்த மாதிரி வாக்குப்பதிவு மையத்தினை கலெக்டர் பார்வையிட்டார். இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், முதன்மை கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, அரசு அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.