காஞ்சீபுரம் அருகே வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் தீயில் கருகி சாவு


காஞ்சீபுரம் அருகே வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் தீயில் கருகி சாவு
x
தினத்தந்தி 5 April 2019 10:30 PM GMT (Updated: 5 April 2019 4:40 PM GMT)

காஞ்சீபுரம் அருகே பழைய இரும்பு பொருட் களை உருக்கும்போது வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே களியாம்பூண்டியில், ஒரு தனியார் இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற் சாலையில் வடநாட்டினர் காண்டிராக்ட் முறையில், பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இந்த தொழிற்சாலையில் பழைய இரும்பு பொருட்களை தொழிலாளர்கள் உருக்கி கொண்டிருந்தனர். அப்படி உருக்கும்போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரும்பு பொருட்கள் திடீரென வெடித்து சிதறியது. இதில் அருகில் இருந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அகிலேஷ்மிஸ்ரா (வயது 34), பீகார் மாநிலத்தை சேர்ந்த சுரேந்தர் (24), ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தினேஷ் (25) உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்களில்உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அகிலேஷ்மிஸ்ரா, சுரேந்தர், தினேஷ் ஆகியோர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில், பீகார் மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணதாஸ் (40), ஜீத்தேந்தர் (27), ஜெக்ஸி (25), ரஞ்சித் (27) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக பொத்தேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில், பெருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனந்தநாராயணன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர்.

Next Story