அன்னவாசல் பகுதியில் கொளுத்தும் கோடை வெயில்: பொதுமக்களின் தாகம் தீர்க்க மண்பானைகளில் தண்ணீர் வியாபாரிகள் ஏற்பாடு


அன்னவாசல் பகுதியில் கொளுத்தும் கோடை வெயில்: பொதுமக்களின் தாகம் தீர்க்க மண்பானைகளில் தண்ணீர் வியாபாரிகள் ஏற்பாடு
x
தினத்தந்தி 5 April 2019 10:45 PM GMT (Updated: 5 April 2019 5:15 PM GMT)

அன்னவாசல் பகுதியில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் மண்பானைகளில் தண்ணீர் வைத்து பொதுமக்களின் தாகம் தீர்க்க வியாபாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

அன்னவாசல்,

நம் முன்னோர் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் தரக்கூடிய மண்பானை சமையலை விரும்பி வந்தனர். உணவில் சுவை கூட்டுவதுடன் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருப்பதாலும் மண்பானைகளை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். மண்பானைகளில் தயிரை ஊற்றி வைத்தால் புளிக்காமல் இருப்பதோடு குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.

இதனால் பெரும்பாலான கிராமங்களில் இன்றும் தயிர், மோரை மண்பானைகளில் ஊற்றிவைக்கின்றனர். குறிப்பாக மண்பானைகளில் ஊற்றி வைக்கும் தண்ணீரை குடிக்கும் போது உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, எவ்வித பக்கவிளைவும் அண்டாது. இதனால் தற்போது கோடைகாலத்தை சமாளிக்க மண்பானை விற்கும் இடங்களை பொதுமக்கள் தேடி அலைய தொடங்கி விட்டனர்.

அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் பலவித வடிவங்களில் மண்பானைகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். திருகு குழாய் பொருத்தப்பட்ட மண்பானை, பாட்டில் மற்றும் குவளை வடிவிலான மண்பானையிலான பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் திருகு குழாய் பொருத்தப்பட்ட மண்பானை மிகவும் சவுகரியமாக இருப்பதால், அதற்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

மேலும் கோடைகாலம் தொடங்கிவிட்டால் பல்வேறு அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் போட்டி போட்டுக்கொண்டு, ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைப்பது வழக்கம். இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால், அரசியல் கட்சியினர் தண்ணீர் பந்தலை அமைக்க வில்லை.

இதனால் பகல் வேளைகளில் வெளியே செல்லும் பொதுமக்கள் தாகம் தீர்க்க தண்ணீரை தேடி அலையும் நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் அன்னவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க அங்குள்ள கடைகளின் முன்பு மண்பானைகளில் தண்ணீர் வைத்து பொதுமக்களின் தாகம் தீர்க்க வியாபாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story