நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா: பால்குடம், பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், பறவைகாவடி எடுத்து, அலகுகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
அன்னவாசல்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா பூச்சொரிதல், கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டு கடந்த மாதம் 24-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 31-ந் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, அம்மன் வீதிஉலா நடைபெற்று வருகிறது.
மேலும் தினமும் மண்டகப்படி நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கீரனூர், நார்த்தாமலை, அன்னவாசல் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கடந்த சில நாட்களாக விரதம் இருந்து வருகிறார்கள்.
அவர்கள் நேற்று காலை முதல் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதேபோல கரும்பால் தொட்டில் கட்டி அதில் குழந்தையை வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
தொடர்ந்து இன்றும் (சனிக்கிழமை) திரளான பக்தர்கள் பால்குடம், அலகுகுத்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 8-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மனை எழுந் தருள செய்து, திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க உள்ளனர்.
Related Tags :
Next Story