கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 69 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 69 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு, அங்கு பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கரூர்,
கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, மணப்பாறை, விராலிமலை, வேடசந்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாக கரூர் நாடாளுமன்ற தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் சுமார் 13½ லட்சம் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றனர். கரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 3 தொகுதிகளில் 6 லட்சம் வாக்காளர்களும், மற்ற 3 தொகுதிகளில் 7½ லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.
இதன் காரணமாக கரூர் தொகுதி வேட்பாளர்கள் கரூர், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் பம்பரமாக சுழன்று தங்களது சின்னத்துக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களின் தேர்தல் பிரசார செலவு உள்ளிட்டவற்றை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் பிரசாரங்களின் போது பணப்பட்டுவாடா ஏதும் நடக்கிறதா? என்பது பற்றி உளவுபிரிவு போலீசாரும் விசாரணை மேற்கொண்டு தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிப்பதால், அதன் அடிப்படையில் சில இடங்களில் வருமானவரித்துறை சோதனையும் நடக்கிறது. கரூரில் கொசுவலை நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
கரூர் மாவட்டத்தில் 1,031 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் 6 துணை வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1,037 வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. அங்கு பணியாற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் உள்ளிட்டோர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். வாக்குப்பதிவின் போது எந்த வழிமுறையினை பின்பற்றி பணியாற்ற வேண்டும் என்பது பற்றி மண்டல அளவிலான அதிகாரிகள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் கடந்த கால நிகழ்வுகள் உள்ளிட்டவற்றின் அடிப் படையில் 69 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கரூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அவற்றில் கரூர் சட்டமன்ற தொகுதியில் கரூர் பிரம்ம தீர்த்தம் சாலையில் உள்ள கோட்டை மேடு வாக்குச்சாவடி, செவ்வந்திபாளையம், நெரூர், திருமாநிலையூர் என 15 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 69 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதால், அங்கு துணை ராணுப்படையினர் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் பணியில் ஈடுபட வைக்க அதிகாரிகள் ஆயத்தமாகி வருகிறார்கள். விரைவில் துணை ராணுவப்படையினர் பஸ் மற்றும் ரெயில்களில் வந்து கரூர் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அணிவகுப்பினை நடத்துவர். அவர்களுக்கு உதவியாகவும், வழிகாட்டியாகவும் கரூர் மாவட்ட காவல்துறை செயல்படும் என போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story