பணத்தை அள்ளிக்கொண்டு செல்லும் ஆளும் கட்சியினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு


பணத்தை அள்ளிக்கொண்டு செல்லும் ஆளும் கட்சியினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 April 2019 4:00 AM IST (Updated: 5 April 2019 11:39 PM IST)
t-max-icont-min-icon

பணத்தை அள்ளிக்கொண்டு செல்லும் ஆளும்கட்சியினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

திருச்சி,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. மாபெரும் வெற்றி பெறப்போகிறது. செல்கின்ற இடங்களில் எல்லாம் பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். 2014-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது போல் நாங்கள் வெற்றி பெறுவோம்.

திருச்சியில் நடந்த திராவிடர் கழக கூட்டத்தில் இந்து முன்னணியினர் போய் தாக்கி இருக்கிறார்கள். சுதந்திர நாட்டில் கருத்து தெரிவிக்க யாருக்கும் உரிமை இருக்கிறது. அதற்கு பதில் தெரிவிக்கலாம், வழக்கு தொடரலாமே தவிர தாக்குதல் என்பது கூடாது. இது தப்பான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்.

தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது. இந்த அமைதிப் பூங்காவில் தேவை இல்லாமல் திராவிடர் கழக தொண்டர்களை தாக்கியது தமிழக மக்களிடம் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தும். சட்டத்தை அவர்கள் கையில் எடுத்தால் அது அவர்களுக்கே ஆபத்தாக முடிந்து விடும்.

தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர்களை விமர்சனம் செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது அதிகார துஷ்பிரயோகம். அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இப்படி எல்லாம் பேசினால் மக்களிடம் எடுபட்டு விடும் என்ற பயத்தில் வழக்கு போடுகிறார்கள். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்து பேசி இருக்கிறார்கள். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. அ.தி.மு.க.வினர் தேர்தலில் தோற்கப் போகிறார்கள். நிறைய தொகுதிகளில் ‘டெபாசிட்’ இழக்கப் போகிறார்கள்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், தேர்தல் ஜனநாயக முறையில் நடக்குமா? தி.மு.க.வினர் வீடுகளில் மட்டும் தான் சோதனை நடத்தப்பட்டு உள்ளது என்று கேட்கிறீர்கள். துரைமுருகன் வீட்டில் பணம் வைத்து இருந்தது தவறு தான். அதே நேரத்தில் தேர்தல் ஆணையமும், பறக்கும் படையினரும் எதிர்க்கட்சியினரிடம் மட்டுமே சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

ஆளும்கட்சியினர் லோடு, லோடாக பணம் அள்ளிக்கொண்டு செல்கிறார்கள். அவர்களை பிடிக்காமல் விட்டு விடுகிறார்கள் என்பது தான் குற்றச்சாட்டு. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆளும் கட்சிக்கு ஒரு அளவு கோல், எதிர்க்கட்சிக்கு என்று ஒரு அளவு கோல் வைப்பது தவறு.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கரூர் நாடாளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து மணப்பாறை பஸ் நிலையம் அருகே அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. மாறி, மாறி மக்களை ஏமாற்றி வருகிறது. மத்தியில் ஏற்கனவே ஆட்சி செய்த காங்கிரஸ் தமிழ்நாட்டை புறக்கணித்தது, வஞ்சித்தது. அதன் கூட்டணி கட்சியான தி.மு.க.வும் மக்களை பற்றி கண்டு கொள்ளாமல் தங்களது குடும்பத்தையே பார்த்து கொண்டது. இதனால், கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும், 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. ஆர்.கே.நகரில் தி.மு.க. டெபாசிட் இழந்தது. இப்போது பிரதமரை தீர்மானிக்க போகிறோம் என்கிறார்கள். பிரதமராக யார் வர வேண்டும் என்பதை தமிழக மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு அதை நிறைவேற்றாமல் விட்டுச் செல்பவன் நான் அல்ல. பணப்பெட்டியுடன் திரியும் வியாபாரிகளை நம்பி ஏமாறாமல் அ.ம.மு.க.வேட்பாளரை ஆதரியுங்கள் என்றார்.

விராலிமலையில் டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்து பேசும்போது, ‘இங்கு உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் எந்த நோய் இருந்தாலும், அதை ஒழிப்பதை விட்டு விட்டு நோயாளியைத்தான் ஒழிப்பார். நோயின் தாக்கத்தை என்றைக்கும் ஒழித்ததில்லை. காங்கிரஸ் வேட்பாளர் செல்போனில் ராகுல்காந்தியுடம் நேரடியாக பேசி எல்லாவற்றையும் செய்து விடுவேன் எனக்கூறி வருகிறார். அவரை ராகுல்காந்தியிடம் பேசி கர்நாடகா அணையை கட்டவிடாமல் நிறுத்த சொல்லுங்கள். இந்த காங்கிரஸ், பா.ஜனதா கட்சி ஆகிய 2 தேசிய கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகின்றன’ என்றார்.

Next Story