வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பும் பணி மும்முரம்


வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 5 April 2019 11:15 PM GMT (Updated: 5 April 2019 6:13 PM GMT)

வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளுக்கு 3,234 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

இதையொட்டி விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வி.வி.பேட் கருவிகள் ஆகியவை 2 நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக படிவங்கள், பேனா, பென்சில், ரப்பர், குண்டூசி, சீல் வைக்கும் அரக்கு, நூல், பைல் டேக், பேப்பர் சீல், தபால் உறைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் சென்னை, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு அச்சகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் நிலையங்களில் இருந்து விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலமாக பெறப்பட்டு அவை விழுப்புரத்திற்கு கொண்டு வரப்பட்டது.

வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான இந்த பொருட்களை மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக பிரித்து அனுப்பும் பணி கலெக்டர் அலுவலகத்தில் மும்முரமாக நடைபெற்றது. இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பிரபாகர், தேர்தல் தனி தாசில்தார் சீனிவாசன், தொடர்பு அலுவலர் ஆதிசக்தி சிவக்குமரிமன்னன் ஆகியோர் முன்னிலையில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்களை பிரித்து அவற்றை உதவி தேர்தல் நடத்தும் அலுவலகமான அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணியில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்த பொருட்கள் அனைத்தும் தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய நாளான வருகிற 17-ந் தேதியன்று தாலுகா அலுவலகங்களில் இருந்து அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story